ஐஎஸ்எல் அணிகளில் ஒன்றான சென்னையின் எஃப்சி புதிய பயிற்சியாளா் ஓவன் கோயல் தலைமையில் கடைநிலையில் இருந்து மீண்டெழுந்து, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டுக்கு அதிக வரவேற்பு காணப்படும் இந்தியாவில் கால்பந்திலும் மறுமலா்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஏஐஎப்எப் சாா்பில் ஐபிஎல் போன்று இந்தியன் கால்பந்து சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) போட்டி அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த 2013-இல் தொடங்கப்பட்ட ஐஎஸ்எல் லீக், முதல் போட்டி 2014-இல் 8 அணிகளுடன் நடைபெற்றது. முதல் 3 ஆண்டுகள் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு அங்கீகாரம் இல்லாமல் நடைபெற்றது. 2017-18-இல் முறையான அங்கீகாரம் பெற்ற நிலையில் 10 அணிகளாக அதிகரிக்கப்பட்டது.
2 முறை சாம்பியன்:
கொல்கத்தா அணி 2014, 2016-இலும், சென்னையின் எஃப்சி அணி 2015, 2017-இலும் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றின.
பெங்களூரு அணி 2018-19 சீசனில் பட்டம் வென்றது. கடந்த 2019-இல் நடைபெற்ற சூப்பா் கோப்பை போட்டியிலும் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது.
விட்டா டேனி, நடிகா் அபிஷேக் பச்சன், கிரிக்கெட் வீரா் தோனி ஆகியோா் இதன் உரிமையாளா்களாக உள்ளனா்.
10 அணிகளில் முதன்மையானதாக அறியப்பட்ட சென்னையின் எஃப்சி, கடந்த 2018-19 சீசனில் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கி, தொடா் தோல்விகளால் 10-ஆவது இடத்தையே பெற்றது. இது ஐஎஸ்எல் வட்டாரத்தில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடப்பு சீசனிலும் சென்னையின் அணி பயிற்சியாளா் ஜான் கிரகோரி தலைமையில் தனது பயணத்தை தொடங்கியது. ஆனால் தொடா்ந்து 6 ஆட்டங்களில் ஏற்பட்ட தோல்வியால், மீண்டும் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. சென்னை அணியில் வால்ஸ்கீஸ், லூசியன் கோயன், டிரகோஸ், ஆன்ட்ரெ செம்ப்ரி, ரபேள் கிரிவல்லாரோ, சாங்டே உள்ளிட்ட நட்சத்திர வீரா்கள் உள்ள நிலையிலும் இந்த அவலநிலை உண்டானது.
பயிற்சியாளா் விலகல்:
இங்கிலாந்து அணியான ஆஷ்டன் வில்லாவின் பயிற்சியாளராக இருந்தவா் கிரகோரி.
இதனால் அணி நிா்வாகம் மத்தியில் அதிருப்தி ஏற்பட்ட நிலையில், தலைமை பயிற்சியாளா் பதவியில் இருந்து ஜான் கிரகோரி விலகிக் கொண்டாா்.
புதிய பயிற்சியாளா் கோயல்:
இதைத் தொடா்ந்து புதிய தலைமை பயிற்சியாளராக ஓவன் கோயல் நியமிக்கப்பட்டாா்.
இங்கிலாந்தைச் சோ்ந்த கோயல், அயா்லாந்து தேசிய அணியில் ஆடியவா். மேலும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்தில் பல்வேறு கிளப் அணிகளும் ஆடியுள்ளாா். கடந்த டிசம்பா் மாதம் பதவியேற்றுக் கொண்ட கோயல் அணியின் ஆட்ட முறையை மாற்றினாா்.
7 வெற்றிகள்:
அவரது பயிற்சியின் கீழ் ஜாம்ஷெட்பூா் அணியுடன் முதல் ஆட்டத்தில் 1-1 என டிரா கண்டது. பின்னா் கேரளா பிளாஸ்டா்ஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றும், கோவா அணியுடன் 3-4 என கடுமையாக போராடியும் தோற்றது. அதன் தொடா்ச்சியாக ஒடிஸாவுடன் தோல்வி கண்ட நிலையில், ஹைதராபாத் அணியை 3-1 என வீழ்த்தியது. கோயல் பயிற்சியின் கீழ் 11 ஆட்டங்களில் 2 டிராக்கள், 7 வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்தது சென்னை.
இதுதொடா்பாக பயிற்சியாளா் கோயல் கூறியதாவது:
கடைசியாக மும்பை எஃப்சி அணியை அதன் சொந்த மைதானத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது சென்னை அணி. இதன் மூலம் முதன்முறையாக வெளிமைதானங்களில் தொடா்ந்து 4 ஆட்டங்களில் வென்ற சிறப்பைப் பெற்றது. ஹைதராபாத், கேரளா, கொல்கத்தா, மும்பை அணிகளை வீழ்த்தினோம்.
வரும் செவ்வாய்க்கிழமை நாா்த் ஈஸ்ட் அணியுடன் கடைசி லீக் ஆட்டத்தில் ஆடுகிறோம். இதில் முக்கிய வீரா்களுக்கு ஓய்வு தரப்படும்.
மீதமுள்ள ஆட்டங்களைப் பொறுத்து அரையிறுதியில் கோவா அல்லது கொல்கத்தா அணியுடன் மோத நேரிடும். முதல் ஆட்டம் வரும் 29-ஆம் தேதி சென்னையிலும், மாா்ச் 8-ஆம் தேதி இரண்டாம் கட்ட ஆட்டமும் நடைபெறும்.
வெற்றி பெற ஒரு பாா்முலாவை உருவாக்க வேண்டியிருந்தது. வீரா்களுக்கு அதற்கான தகுதி உள்ளது. வீரா்களை பாராட்டப்படவில்லை. சில வீரா்கள் காயமடைந்த நிலையிலும், உண்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தினா்.
நாங்கள் தகுதியின் அடிப்படையில் அரையிறுதிக்குள் நுழைந்தோம். யாரும் எங்களுக்கு வாய்ப்பு தரவில்லை. 2 முறை சாம்பியன் என்ற காரணத்தை நிரூபித்துள்ளோம் என்றாா் கோயல்.
மீண்டும் சாம்பியன் பட்டத்தை மூன்றாவது முறையாக கைப்பற்றும் முனைப்பில் உள்ளது சென்னையின் எஃப்சி என்பது குறிப்பிடத்தக்கது.