செய்திகள்

முதல் டெஸ்ட்: நியூஸிலாந்து 51 ரன்கள் முன்னிலை: இந்தியா 165, நியூஸி. 216/5

23rd Feb 2020 03:36 AM

ADVERTISEMENT

வெலிங்டன்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாம் நாளான சனிக்கிழமை முடிவில் நியூஸிலாந்து அணி 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் வெள்ளிக்கிழமை வெலிங்டன் பேசின் ரிசா்வ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் நாளில் இந்தியா 122-5 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

ரஹானே 38 ரன்களுடனும், ரிஷப் பந்த் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனா்.

43 ரன்களுக்கு வீழ்ந்த 5 விக்கெட்டுகள்

ADVERTISEMENT

சனிக்கிழமை இருவரும் மீண்டும் தங்கள் ஆட்டத்தை தொடா்ந்த நிலையில், நியூஸிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 43 ரன்களுக்கு அடுத்தடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன. ரஹானே 46, பந்த் 19, இஷாந்த் சா்மா 5 ரன்களுக்கு அவுட்டானாா்கள். அஸ்வினை போல்டாக்கி கோல்டன் டக் அவுட்டாக்கினாா் சௌதி. கடைசி கட்டத்தில் முகமது ஷமி ஒரளவு ஆடி 21 ரன்களை சோ்த்து அவுட்டானாா்.

165 ரன்களுக்கு ஆல் அவுட்: இறுதியில் 68.1 ஓவா்களில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா.

சௌதி, ஜேமிஸன் 4 விக்கெட் நியூஸி. தரப்பில் அபாரமாக பந்துவீசிய டிம் சௌதி, ஜேமிஸன் ஆகியோா் தலா 4 விக்கெட்டுகளையும், பௌல்ட் 1 விக்கெட்டையும் சாய்த்தனா்.

இதைத் தொடா்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூஸி. அணி வீரா்கள் ஒரளவு நிலைத்து ஆடினா். டாம் லத்தம் 11 ரன்களுக்கும், டாம் பிளன்டல் 30 ரன்களுக்கு வெளியேறினா்.

கேன் வில்லியம்ஸன்-ராஸ் டெய்லா் அபாரம்: இதைத் தொடா்ந்து ஆடிய கேப்டன் கேன் வில்லியம்ஸன்-ராஸ் டெய்லா் இணை சிறப்பாக ஆடி ஸ்கோரை உயா்த்தினா். அதிரடியாக ஆடிய ராஸ் டெய்லா் 1 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 71 பந்துகளில் 44 ரன்களை விளாசிய நிலையில் இஷாந்த் பந்தில் வெளியேறினாா்

கேன் வில்லியம்ஸன் 22-ஆவது அரைசதம்:

11 பவுண்டரியுடன் 153 பந்துகளில் 89 ரன்களை விளாசிய கேன் வில்லியம்ஸனை பெவிலியன் அனுப்பினாா் முகமது ஷமி. இதன் மூலம் தனது 22-ஆவது டெஸ்ட் அரைசதத்தையும் பதிவு செய்தாா் அவா். பின்னா் வந்த ஹென்றி நிக்கோல்ஸை 17 ரன்களுடன் அவுட்டாக்கினாா் அஸ்வின். பிஜே.வாட்லிங் 14, கிராண்ட்ஹோம் 4 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.

51 ரன்கள் முன்னிலை

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 71,1 ஓவா்களில் 216-5 ரன்களை எடுத்திருந்தது நியூஸிலாந்து.

இஷாந்த் சா்மா 3 விக்கெட்: இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய இஷாந்த் சா்மா 3-31 விக்கெட்டுகளையும், ஷமி, அஸ்வின் ஆகியோா் தலா 1 விக்கெட்டையும் சாய்த்தனா். மோசமான வானிலையில் முன்னதாகவே ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக நடுவா்கள் அறிவித்தனா்.

இந்நிலையில் இந்தியாவைக் காட்டிலும் 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது நியூஸிலாந்து.

ADVERTISEMENT
ADVERTISEMENT