டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த 2-வது ஆஸ்திரேலிய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆஷ்டன் அகர்.
நேற்று நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. இந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் உள்பட 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் ஆஷ்டன் அகர். இதன் மூலம் பிரெட் லீ-க்குப் பிறகு ஹாட்ரிக் எடுத்த 2-வது ஆஸ்திரேலிய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்த ஆஷ்டன் அகர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவுக்கு எதிரான தொடருக்குப் பிறகு ஜடேஜாவிடம் பேசினேன். கிரிக்கெட் உலகில் எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு வீரர். ஜடேஜாவைப் போல நானும் விளையாட வேண்டும் என விரும்புகிறேன். அவர் ஒரு ராக் ஸ்டார். அதிரடியாக விளையாடுவார், அற்புதமாக ஃபீல்டிங் செய்வார், பந்தை நன்றாக சுழலச் செய்வார். அவர் பேட்டிங் செய்கிறபோது நேர்மறை எண்ணங்களுடன் இருப்பார். அதே எண்ணங்களை ஃபீல்டிங்கிலும் வெளிப்படுத்துவார் என்று பேட்டியளித்துள்ளார்.