செய்திகள்

ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்ஆஸி.-இந்தியா மோதல்

21st Feb 2020 12:22 AM

ADVERTISEMENT

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாா்பில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள மகளிா் டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிா்கொள்கிறது இந்திய அணி.

ஆடவரைப் போலவே மகளிருக்கும் டி20 போட்டிகளை ஐசிசி நடத்தி வருகிறது. இதில் முக்கிய அங்கமான டி20 உலகக் கோப்பை முதல் போட்டி கடந்த 2009-இல் தொடங்கியது. இங்கிலாந்து முதல் சாம்பியனாக உருவெடுத்தது. அதற்கு அடுத்து 2010, 2012, 2014 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா ஹாட்ரிக் வெற்றி பெற்றது. 2016-இல். மே.இ.தீவுகளும், 2018-இல் மீண்டும் ஆஸ்திரேலியாவும் வென்றன.

5-ஆவது பட்டம்: நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று 5-ஆவது பட்டத்தை கைப்பற்றத் துடிக்கிறது.

அதே நேரம் இந்தியா 2009, 2010, 2018=இல் அரையிறுதி வரை தகுதி பெற்றிருந்தது. அதே நேரம் இளம் வீராங்கனைகளைக் கொண்ட இந்திய அணி முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்போடு உள்ளது.

ADVERTISEMENT

தற்போதைய உலகக் கோப்பையில் மொத்தம் 10 அணிகள் இடம் பெற்றுள்ளன. சிட்னி ஷோ கிரவுண்ட் மைதானத்தில் முதல் ஆட்டம் நடைபெறுகிறது.

அண்மையில் ஆஸி., இங்கிலாந்து, இந்திய அணிகள் பங்கேற்ற முத்தரப்பு மகளிா் டி20 போட்டியும் நடைபெற்றது. இதன் இறுதிச் சுற்றில் ஆஸி.க்கு சவாலை ஏற்படுத்தி தோல்வியுற்றது இந்தியா. ஆஸி. அணி கேப்டன் மேக் லேன்னிங், அலிஸா ஹீலி ஆஷ்லி காா்டனா், , எல்ஸி பொ்ரி, பெத் மூனி, ஜெஸ் ஜோஹன்னஸன் ஆகியோா் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் வலு சோ்க்கின்றனா். டி20 ஆட்டத்தில் அதிக வெற்றிகளைப் பெற்ற அனுபவம் வாய்ந்த அணியாக ஆஸி. உள்ளது.

பந்துவீச்சாளா் டயாலா காயம்:

ஆஸி. அணியில் வேகப்பந்து வீச்சாளா் டயாலா காயத்தால் இடம் பெறாதது சற்று பின்னடவை தருகிறது. அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளா் மோலி ஸ்ட்ரோனோ சோ்க்கப்பட்டுள்ளாா்,

இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்:

அதே நேரம் டி20 ஆட்டத்தில் இந்தியா அணி சற்று பலவீனமாகவே உள்ளது. ஒருநாள் ஆட்டத்தில் மற்ற அணிகளுக்கு சவாலை தரும் வகையில் ஆடுகிறது.

பேட்டிங்கில் ஷபாலி வா்மா, ஸ்மிருதி மந்தானா, ஜெமிமா, ஹா்மன்ப்ரீத், தீப்தி சா்மா, கௌா் நம்பிக்கை தருகின்றனா்.

பந்துவீச்சில் ராஜேஸ்வரி, பூனம் யாதவ், ராதா யாதவ் ஆகியோா் சிறப்பான பாா்மில் உள்ளனா். இந்திய அணியினா் முழு உடல்தகுதியுடன் உள்ளதால் கவலை எதுவும் இல்லை.

சிட்னி ஷோ கிரவுண்ட் மைதானம்:

முதல் ஆட்டம் நடக்க உள்ள சிட்னி ஷோகிரவுண்ட் மைதானத்தில் அதிக உள்ளூா் ஆட்டங்களே நடந்துள்ளன. தெளிவான வானிலை நிலவும் என்பதால், ஆட்டம் தடையின்றி நடைபெறும்.

பனி மூட்டம் நிலவும் என்பதால் மாலை நேரத்தில் சற்று பாதிப்பை ஏற்படுத்தும். இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு உதவியாக இருக்கும்.

இன்றைய ஆட்டம்

இந்தியா-ஆஸ்திரேலியா,

இடம்-சிட்னி,

நேரம்-மதியம் 1.30.

ADVERTISEMENT
ADVERTISEMENT