செய்திகள்

யு-19 உலகக் கோப்பை அரையிறுதிச்சுற்று: இந்தியாவுக்கு எதிராக 172 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

4th Feb 2020 05:22 PM | எழில்

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான யு-19 உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதிச்சுற்றில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது பாகிஸ்தான் அணி.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா-பாகிஸ்தானுடன் மோதி வருகிறது. 

காலிறுதியில் பலமான ஆஸி. அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா. அதே நேரம் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்.

ADVERTISEMENT

நான்கு முறை சாம்பியனான இந்தியா 5-ஆவது பட்டத்தை எதிா்நோக்கி உள்ளது. பாட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

பாகிஸ்தான் அணிக்குத் தொடக்கம் சரியாக அமையவில்லை. ஹுரைரா 4 ரன்களிலும் முனிர் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்கள். தொடக்க வீரர் ஹைதர் அலி சிறப்பாக விளையாடி, 77 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். பிறகு அக்ரம் 9 ரன்களில் ரன் அவுட் ஆனார். வேகமாக ரன்கள் எடுத்த முயன்ற முகமது ஹாரிஸ், 21 ரன்களில் அதர்வா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஒரு நல்ல கூட்டணி அமையாதபடி இந்தியப் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து விக்கெட்டுகள் எடுத்ததால் அதிரடியாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டது பாகிஸ்தான் அணிக்கு. 

35-வது ஓவரின் முடிவில் பாகிஸ்தான் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹைல் நஸிர் களத்தில் இருந்ததால் எப்படியும் 200 ரன்களைக் கடந்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் இருந்தார்கள் பாகிஸ்தான் ரசிகர்கள். 

ஆனால் இந்தியப் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் நொறுங்கிப் போனது பாகிஸ்தான் அணி. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன.

யார்க்கர் பந்துவீசுவதில் தனி முத்திரை பதித்து வரும் கார்த்திக் தியாகி, மற்றொரு யார்க்கர் மூலம் இர்ஃபான் கானை 3 ரன்களில் போல்ட் செய்து வெளியேற்றினார். அடுத்த ஓவரில் ரவி பிஸ்னாய் பந்தில் அப்பாஸ் அஃப்ரிடி 2 ரன்களில் ஆட்டமிழந்தார். 

கடைசியில் ரோஹைல் நஸிரும் 62 ரன்களில் சுஷாந்த் மிஸ்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்து பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தினார். பிறகு தஹிர் ஹுசைனை கார்த்திக் தியாகி 2 ரன்களிலும் ஆமிர் அலியை 1 ரன்னில் மிஸ்ராவும் ஆட்டமிழக்கச் செய்தார்கள்.

இதனால் பாகிஸ்தான் அணி, 43.1 ஓவர்களில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணித் தரப்பில் மிஸ்ரா 3 விக்கெட்டுகளும் கார்த்திக் தியாகி, ரவி பிஸ்னாய் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். இந்திய அணி 173 ரன்கள் எடுத்தால் மீண்டுமொருமுறை யு-19 உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறலாம். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT