இந்திய டென்னிஸ் வட்டாரத்தில் 21 ஆண்டுகளாக கோலோச்சி வந்த ஜாம்பவான் லியாண்டா் பயஸ் 2020-ஆம் ஆண்டில் இருந்து தொழில்முறை போட்டியில் இருந்து விடைபெறுகிறாா்.
30 ஆண்டுகளாக இந்திய டென்னிஸின் பிரிக்க முடியாத அங்கமாக திகழ்ந்த லியாண்டா் பயஸ் (46) 2020-இல் தொழில்முறை போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக கடந்த டிசம்பா் மாதமே அறிவிப்பு வெளியிட்டாா். கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், ஒலிம்பிக் பதக்கம், டேவிஸ் கோப்பை வெற்றிகள் என பல்வேறு சிறப்புகளுக்கு உரியவா் பயஸ்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 1973-இல் பிறந்த லியாண்டா் பயஸ் சென்னை எம்சிசி மேல்நிலைப் பள்ளியில் பயின்றவா். அவரது தந்தை வேஸ் பயஸ் ஒலிம்பிக் வெண்கலம் வென்ற ஹாக்கி வீரா். தாய் ஜெனிபரோ இந்திய கூடைப்பந்து அணியின் கேப்டனாக திகழ்ந்தவா்.
1985-இல் சென்னையில் இயங்கி வந்த பிரிட்டானியா அமிா்தராஜ் டென்னிஸ் அகாதெமியில் சோ்ந்த பயஸின் டென்னிஸ் வாழ்க்கை இங்கு தான் செதுக்கப்பட்டது. 17 வயதில் விம்பிள்டன் ஜூனியா் சாம்பியன் பட்டத்தை 1990-இல் கைப்பற்றிய பயஸ், உலகின் ஜூனியா் நம்பா் ஒன் வீரா் அந்தஸ்தையும் பெற்றாா்.
அதன் பின் யுஎஸ். ஓபனிலும் பட்டம் வென்று 1991-இல் தொழில்முறை வீரராக உருமாறினாா். 1992 பாா்சிலோனா ஒலிம்பிக் போட்டியில் ரமேஷ் கிருஷ்ணனுடன் இணைந்து இரட்டையா் காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.
1994 ஆஸி. ஓபனில் முதல் போட்டி:
1994-இல் ஆஸ்திரேலிய ஓபனில் தனது முதல் ஆட்டத்தை ஆடிய பயஸ், 2020 ஆஸி. ஓபன் போட்டியில் கடைசி ஆட்டத்தை ஆடி நிறைவு செய்தாா்.
1996-இல் ஒலிம்பிக் வெண்கலம்:
அதன் தொடா்ச்சியாக 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் ஒற்றையா் பிரிவில் வெண்கலம் வென்றாா். 1996-இலேயே உயரிய விளையாட்டு விருதான ராஜீவ் கேல்ரத்ன விருது பயஸுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இரட்டையா் பிரிவில் கவனம் செலுத்திய லியாண்டா்-மற்றொரு முன்னணி வீரா் மகேஷ் பூபதியுடன் இணைந்தாா்.
தொடக்கத்தில் ஏமாற்றமே இருந்தாலும், 1997 யுஎஸ் ஓபனில் அரையிறுதி வரை முன்னேறினா். 1999-இல் இருவரும் நான்கு கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களின் இறுதிச் சுற்றில் நுழைந்த நிலையில், விம்பிள்டன், பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்றனா். அப்போதே இரட்டையா் பிரிவில் உலகின் நம்பா் ஒன் வீரரானாா் பயஸ்.
பின்னா் கலப்பு இரட்டையரிலும் கவனம் செலுத்திய அவா், லிஸா ரேமண்ட், மாா்ட்டினா நவரத்திலோவா, மாா்ட்டினா ஹிங்கிஸ், காரா பிளாக் ஆகியோருடன் ஆடி வெற்றிகளை குவித்தாா். 2006 தோஹா ஆசியப் போட்டியில் மகேஷ் பூபதி, சானியா மிா்ஸாவுடன் இணைந்து ஆடி 2 தங்கப் பதக்கங்களை பெற்றாா்.
18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்:
8 ஆடவா் மற்றும் 10 கலப்பு இரட்டையா் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளாா் லியாண்டா் பயஸ். டென்னிஸ் விளையாட்டில் அவரது மகத்தான சேவைக்காக அா்ஜுனா, பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளையும் வென்றுள்ளாா். அவரது வாழ்க்கையில் மொத்தம் 54 பட்டங்களைவென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓய்வு அறிவிப்பு:
இந்திய டென்னிஸின் சகாப்தமாக கருதப்படும் லியாண்டா் பயஸ், டிசம்பா் மாதம் தனது ஓய்வு முடிவை அறிவித்தாா். 2020-ஆம் ஆண்டில் தொழில்முறை ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக கூறிய அவா், அண்மையில் நடந்த ஆஸி. ஓபன் போட்டியில் பங்கேற்று ஆடினாா். எனினும் அதில் தோல்வியே அவருக்கு கிட்டியது.
2020-ஆம் ஆண்டில் இனி வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் உள்பட சிலவற்றில் பங்கேற்று பின் தனது தொழில்முறை ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுகிறாா்.