செய்திகள்

மீண்டும்.. மீண்டும்.. மீண்டும்.. 3-வது முறையாக கையிலிருந்த வெற்றியைத் தவறவிட்டது நியூஸிலாந்து

DIN


நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றியுள்ளது.

நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது.

164 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணிக்கு தொடக்கம் படுமோசமாக அமைந்தது. முதல் விக்கெட்டாக கப்தில் வெறும் 2 ரன்களுக்கு பூம்ரா வேகத்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து  அதிரடி காட்டிய கோலின் முன்ரோ 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் ஓவரில் போல்டானார். அடுத்து களமிறங்கிய டாம் புரூஸும் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதனால், அந்த அணி 17 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதையடுத்து, சைஃப்ர்ட்டுடன் ராஸ் டெய்லர் இணைந்தார். இந்த இணை தொடக்கத்தில் விக்கெட்டைப் பாதுகாத்து விளையாடியது. இதன்பிறகு, ரன் ரேட்டை உயர்த்தும் நோக்கில் இருவரும் அதிரடிக்கு மாற முயற்சித்தனர். 

இந்த சூழலில் இந்திய அணி ஷிவம் துபேவை பந்துவீச அழைத்தது. இவருடைய ஓவருக்கு முன் நியூஸிலாந்து அணி 9 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், 10-வது ஓவரை வீசிய துபே 34 ரன்களை வாரி வழங்கினார். இதனால், இந்த ஓவரின் முடிவில் நியூஸிலாந்து அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களை எட்டி வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை எளிதாக்கியது. வெற்றி பெற ஒரு ஓவருக்கு 7-க்கும் குறைவான ரன்களே தேவை என்ற நிலை ஏற்பட்டது. எனவே, ஆட்டம் மீண்டும் நியூஸிலாந்து பக்கம் திரும்பியது.

ஆனால், இந்திய அணி கடந்த இரண்டு ஆட்டங்களைப்போல் விடாமுயற்சியோடு ஆட்டத்தை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 29 பந்துகளில் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்து வந்த சைஃபர்ட் அரைசதம் அடித்த கையோடு சரியாக 50 ரன்களுக்கு சைனி பந்தில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் இந்திய அணியின் வெற்றிக்கான கதவைத் திறந்தது. அடுத்த ஓவரில் பூம்ரா யார்க்கரில் மிட்செல் 2 ரன்களுக்கு போல்டானார். 

இதனால், அனுபவ வீரரான ராஸ் டெய்லர் மீது பொறுப்பும் நெருக்கடியும் அதிகரித்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டும் மீண்டும் உயரத் தொடங்கியது.

இந்நிலையில், ஷர்துல் தாக்கூர் மீண்டும் ஒரு அற்புதமான ஓவரை வீசி நியூஸிலாந்துக்கு இரட்டை அடி கொடுத்தார். இந்த ஓவரின் 3-வது பந்தில் சான்டனரையும், 5-வது பந்தில் குக்லெயினையும் ஆட்டமிழக்கச் செய்தார் ஷர்துல் தாக்கூர்.

இந்த நெருக்கடியிலேயே அடுத்த ஓவரின் (18-வது ஓவர்) முதல் பந்தில் ராஸ் டெய்லரும் அரைசதம் அடித்த கையோடு 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், கடைசி 2 ஓவரில் நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில், 19-வது ஓவரை வீசிய பூம்ரா வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, நியூஸிலாந்து அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த சௌதி விக்கெட்டையும் கைப்பற்றினார். 

இதையடுத்து, நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருந்தது. இந்த ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார். இதில், சோதி 2 இமாலய சிக்ஸர்கள் அடித்தாலும், 13 ரன்கள் மட்டுமே நியூஸிலாந்து அணிக்கு கிடைத்தது.

இதன்மூலம், 5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்திய அணித் தரப்பில் பூம்ரா 3 விக்கெட்டுகளையும், நவ்தீப் சைனி மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

கடந்த இரண்டு ஆட்டங்களில் கையில் இருந்த வெற்றி வாய்ப்புகளைத் தவறவிட்டு சூப்பர் ஓவர் வரை எடுத்துச் சென்று தோல்வியடைந்த நியூஸிலாந்து அணி, இந்த ஆட்டத்திலும் அதே தவறைச் செய்துள்ளது. தொடக்கத்தில் திணறினாலும், சைஃப்ர்ட் மற்றும் டெய்லர் பாட்னர்ஷிப் நியூஸிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பை எளிதாக்கியது. ஆனால், முக்கியமான கட்டத்திலும் நெருக்கடியை எதிர்கொள்வதிலும் திணறிய நியூஸிலாந்து இந்த தொடரின் 5-வது ஆட்டத்திலும் தோல்வியடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT