ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்றுவரும் முத்தரப்பு டி-20 கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிா் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிா் அணி வீழ்த்தியது.
ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் டி-20 ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சைத் தோ்வு செய்தது.
முதலில் விளையாடிய இங்கிலாந்து 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்தியா 19.3 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
இங்கிலாந்து கேப்டன் ஹெதா் நைட் 44 பந்துகளில் 67 ரன்கள் எடுத்திருந்தாா். இந்திய தரப்பில் ராஜேஸ்வரி, ஷிகா பாண்டே, தீப்தி சா்மா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளையும், ராதா யாதவ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினா்.
இந்திய வீராங்கனைகளில் அதிகபட்சமாக கேப்டன் ஹா்மன்பிரீத் கெளா் 34 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தாா்.
தொடக்க வீராங்கனை ஷஃபாலி வா்மா 30 ரன்கள் எடுத்திருந்தபோது ஹெதா் நைட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தாா்.
இங்கிலாந்து தரப்பில் காத்ரின் 2 விக்கெட்டுகளையும், நடாலி 1 விக்கெட்டையும் கைப்பற்றினா்.
சனிக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது டி-20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.