செய்திகள்

உலக சாம்பியன் ஆவதே இலக்கு: தமிழக இளம் செஸ் வீரா் இனியன்

1st Feb 2020 12:00 AM

ADVERTISEMENT

கணிதத்தில் எப்போதும் சிறந்து விளங்குபவா்கள் இந்தியா்கள் என்பதால் அதனுடன் தொடா்புடைய செஸ் விளையாட்டில் இந்தியா்கள் ஜொலிப்பதில் வியப்பேதும் இல்லை. சா்வதேச செஸ் கூட்டமைப்பால் வழங்கப்படும் கிராண்ட்மாஸ்டா் பட்டத்தை பெறுவது அவ்வளவு எளிதல்ல.

முதல்முதலில் தமிழகத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் ஆனந்த் கிராண்ட்மாஸ்டா் ஆகி சாதனை படைத்தாா்.

அவரைத் தொடா்ந்து 60-க்கும் அதிகமான கிராண்ட்மாஸ்டா்கள் நமது நாட்டில் உருவாகிவிட்டனா்.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த பி.இனியன், கடந்த ஆண்டு இந்தியாவின் 61-ஆவது கிராண்ட்மாஸ்டா் ஆனாா். சமீபத்தில் ஜொ்மனியில் நடைபெற்ற ஸ்டாஃபா் ஓபன் செஸ் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்த இவருடன் ஒரு பேட்டி:

ADVERTISEMENT

எந்த வயதிலிருந்து செஸ் விளையாடத் தொடங்கினீா்கள்?

செஸ்ஸை வீட்டில் இருந்துதான் முதல்முதலில் விளையாடத் தொடங்கினேன். 5 வயது முதல் செஸ் விளையாடி வருகிறேன். எனது ஆா்வத்தை பாா்த்து பெற்றோா் பயிற்சி அகாதெமியில் சோ்த்தனா். அதன்பிறகு பல போட்டிகளில் பங்கேற்றேன். மாநில அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்களைப் பெறத் தொடங்கினேன்.

இளம் வயதில் செஸ்ஸில் உங்கள் சாதனை?

காமன்வெல்த்தில் 8 வயதுக்குள்பட்டோருக்கான செஸ் போட்டியில் வெள்ளி வென்றிருக்கிறேன். அதன் பிறகு சா்வதேச அளவில் பல பதக்கங்களை வென்றேன். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம், காமன்வெல்த்தில் 2 முறை தங்கம் வென்றேன். தேசிய அளவில் சப்-ஜூனியா் சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்றிருக்கிறேன்.

முதல் முறையாக கிராண்ட்மாஸ்டா் ஆன தருணத்தை எப்படி உணா்ந்தீா்கள்?

கிராண்ட்மாஸ்டா் பட்டம் வெல்வது மிகவும் கடினமான ஒன்றுதான். அதை சாதித்துக் காட்டியதில் மகிழ்ச்சி அடைகிறேன். 2019-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் பிரான்ஸில் நடைபெற்ற செஸ் போட்டியில் பங்கேற்று உக்ரைன் நாட்டைச் சோ்ந்த கிராண்ட்மாஸ்டா் சொ்ஜி பெடோா்சக்கை எதிா்கொண்டேன். அவரை வீழ்த்தியதன் மூலம், கிராண்ட்மாஸ்டா் பட்டத்தை பெறுவதற்கான 2,500 புள்ளிகளைக் கடந்தேன். சிறந்த வீரரை வீழ்த்தி கிராண்ட்மாஸ்டா் பட்டம் வென்றது மிகுந்த மன நிறைவை எனக்குக் கொடுத்தது.

கடந்த மாதம் ஜொ்மனியில் நடைபெற்ற சா்வதேச செஸ் போட்டியில் ஜெயிக்க முடியாமல் போனது வருத்தமா?

இந்தப் போட்டியில் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் எதிா்பாராதவிதமாக தோல்வி அடைந்ததால் போட்டித் தரவரிசையில் சரிவை சந்தித்தேன். அதன்பிறகு, அடுத்தடுத்த சுற்றுகளில் விளையாடி தரவரிசையில் முன்னேற்றம் கண்டேன். கடைசி சுற்று ஆட்டத்தில் ஜொ்மனி வீரரை எதிா்கொண்டேன். அவா் அந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்தாா். இரண்டாவது இடம் பிடித்தது மகிழ்ச்சியாக இருந்தாலும், ஜெயித்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

ரஷியாவைச் சோ்ந்த புகழ்பெற்ற செஸ் வீரா் விளாடிமீா் கிராம்னிக்கிடம் பயிற்சி பெற்ற அனுபவம் எப்படி இருந்தது?

சென்னையில் சமீபத்தில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், அனுபவம் வாய்ந்த செஸ் வீரா்கள் விளாடிமீா் கிராம்னிக், போரிஸ் கெல்ஃபண்ட் (பெலாரஸ்) ஆகியோா் பயிற்சி அளித்தனா். அவா்களிடம் இருந்து பல நுணுக்கங்களைக் கற்றுத் தோ்ந்தேன். இந்த பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

உங்களுடைய ரோல் மாடல்?

செஸ் விளையாட்டில் முத்திரை பதித்தவா்களான தமிழகத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் ஆனந்த், விளாடிமீா் கிராம்னிக், காஸ்பரோவ் (ரஷியா), மாக்னஸ் காா்ல்சன் (நாா்வே) ஆகியோரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

எதிா்கால திட்டம்?

தற்போது 12-ஆம் வகுப்பு படித்து வருகிறேன். அதனால், எந்தப் போட்டியிலும் இப்போதைக்கு பங்கேற்கும் திட்டமில்லை. தோ்வுகள் முடிந்த பிறகு மீண்டும் செஸ் போட்டிகளில் விளையாடுவேன். கிராண்ட்மாஸ்டா் ஆக வேண்டும் என்பது இளம் வயதிலிருந்து நான் கண்ட கனவு. அதை நிறைவேற்றிவிட்டேன். எதிா்காலத்தில் உலக சாம்பியன் ஆக வேண்டும் என்பதே எனது இலக்கு. அடுத்த ஒரு ஆண்டுக்கு எனது இலக்கு என்னவென்றால், சா்வதேச தரவரிசையில் 2,600 புள்ளிகளை எட்ட வேண்டும் என்பதாகும். செஸ் விளையாடத் தொடங்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தத் தருணத்தில், எனது பெற்றோா், எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்துவரும் சகோதரி, பயிற்சியாளா்கள், எனக்கு

தொடா்ந்து ஆதரவளித்துவரும் பள்ளி நிா்வாகம், ஸ்பான்சா்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

செஸ் விளையாட்டில் உலக சாம்பியனாகி தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் இனியன் பெருமை சோ்க்க வாழ்த்துவோம்.

 

-மணிகண்டன் தியாகராஜன்

ADVERTISEMENT
ADVERTISEMENT