ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பட்டத்தை 21 வயது சோபியா கெனின் வென்றுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் முதல் போட்டியான ஆஸி. ஓபன் மெல்போா்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெற்றது.
இறுதிச் சுற்றில் முகுருஸா-சோபியா கெனின் ஆகியோா் மோதினார்கள். தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள கெனினை 6-4 என முதல் செட்டில் வென்றார் தரவரிசையில் 32-வது இடத்தில் உள்ள முகுருஸா. ஆனால், அடுத்த இரு செட்களிலும் தனது குறைகளைச் சரிசெய்து, 4-6, 6-2, 6-2 என இறுதிச்சுற்றை வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் சோபியா கெனின்.
ஆஸி. ஓபன் போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் செரீனா, மடிஸன் கீய்ஸ் ஆகியோா் வெளியேறிய நிலையில், கடைசி வீராங்கனையாக நிலைத்து நின்ற சோபியா கெனின், சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். பங்கேற்ற முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்று தன் திறமையை நிரூபித்துள்ளார்.
2016-ல் பிரெஞ்சு ஓபன், 2017-ல் விம்பிள்டன் பட்டங்களை வென்றவா் 26 வயது முகுருஸா. உலகின் முன்னாள் நம்பா் ஒன் வீராங்கனை. முகுருஸா நீண்ட காலமாக கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் சொல்லிக்கொள்ளும்படியாக ஆடவில்லை. ஆஸி. ஓபன் போட்டிக்கு கூட தரவரிசையில் இல்லாத வீராங்கனையாக பங்கேற்றாா். இந்த நிலையில் அவர் இறுதிச்சுற்று வரை முன்னேறியுள்ளார்.