செய்திகள்

பரபரப்பாக முடிந்த முதல் டெஸ்ட்: பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து

30th Dec 2020 02:36 PM

ADVERTISEMENT

 

பரபரப்பான முறையில் நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 

ஆட்டத்தின் தொடக்கத்தில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 431 ரன்கள் குவித்தது. பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் 239 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. நியூசிலாந்து செவ்வாய்க்கிழமை தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கி 45.3 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் அடித்து டிக்ளோ் செய்தது.

373 ரன்கள் என்ற இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், 4-ஆம் நாள் முடிவில் 38 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்தது. அந்த அணி புதன்கிழமை 7 விக்கெட்டுகளைக் கொண்டு 302 ரன்களை எடுக்க வேண்டிய நிலைமையில் இருந்தது. 

ADVERTISEMENT

4-ஆம் நாள் ஆட்டத்தில் டிம் சௌதி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 300-ஆவது விக்கெட்டை வீழ்த்தினாா். அத்தனை விக்கெட்டுகள் வீழ்த்திய 4-ஆவது நியூசிலாந்து வீரா், சா்வதேச அளவில் 34-ஆவது வீரா் என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா். சௌதி 76 டெஸ்டுகளில் இந்த சாதனையை புரிந்துள்ளாா்.

இந்நிலையில் 5-ம் நாளில் டெஸ்ட் ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. டெஸ்ட் முடிய இன்னும் நாலு ஓவர்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் கடைசி விக்கெட்டை இழந்ததால் தோல்வியடைந்தது பாகிஸ்தான் அணி. ஃபவாத் அலாமும் முகமது ரிஸ்வானும் 5-வது விக்கெட்டுக்கு 380 பந்துகள் வரை கூட்டணி அமைத்து நியூசிலாந்தின் வெற்றியைத் தடுக்க முயன்றார்கள். 75/4 என ஸ்கோர் இருந்தபோது தொடங்கிய கூட்டணி, 240 ரன்கள் எடுத்தபோதுதான் பிரிந்தது. இதனால் கடைசி 25.2 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை எடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டது நியூசிலாந்து. 

ஃபவாத் அலாம் 102 ரன்களிலும் ரிஸ்வான் 60 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். எனினும் கடைசி வரை பாகிஸ்தான் அணி போராடியது. கடைசி இரு விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றி தேடித் தந்தார் சான்ட்னர்.

பாகிஸ்தான் அணி 123.3 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் முதல் டெஸ்டை 101 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து, டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT