செய்திகள்

இலங்கையுடனான முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா பதிலடி

27th Dec 2020 10:18 PM

ADVERTISEMENT


இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 340 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் கூடுதலாக 56 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இலங்கை. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷனாகா 66 ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் சிபாம்லா 4 விக்கெட்டுகளையும், முல்டர் 3 விக்கெட்டுகளையும், நிகிடி மற்றும் நோர்க்கியா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ADVERTISEMENT

தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு டீன் எல்கர் மற்றும் எய்டன் மார்கிரம் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்த நிலையில் மார்கிரம் 68 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வான் டர் டசன் 15 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட எல்கர் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து, கேப்டன் குயின்டன் டி காக்கும் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்ததால் 220 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது தென் ஆப்பிரிக்கா. இதையடுத்து, அனுபவ பாப் டு பிளெஸ்ஸி மற்றும் தெம்பா பவுமா கூட்டணி அமைத்து விக்கெட்டைப் பறிகொடுக்காமல் பார்த்துக் கொண்டனர். 

2-வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்து 79 ரன்கள் பின்தங்கியுள்ளது.

டு பிளெஸ்ஸி 55 ரன்களுடனும், பவுமா 41 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இலங்கைத் தரப்பில் பெர்னான்டோ, ஷனாகா, ஹசரங்கா மற்றும் குமாரா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT