செய்திகள்

தொடர் ரத்தாகுமா?: கரோனா அச்சுறுத்தலால் 2-வது ஒருநாள் ஆட்டம் ஒத்திவைப்பு!

7th Dec 2020 04:02 PM

ADVERTISEMENT

 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடரின் 2-வது ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து 3-0 என முற்றிலுமாகக் கைப்பற்றியது. 

டி20 தொடர் நிறைவடைந்த நிலையில், இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வெள்ளியன்று தொடங்க வேண்டிய ஒருநாள் தொடர் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. 

ADVERTISEMENT

ஒருநாள் தொடருக்கு முன்பு நடத்தப்பட்ட பரிசோதனையில் தெ.ஆ. வீரர் ஒருவருக்கு கரோனா உறுதியானது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக முதல் ஒருநாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால், இங்கிலாந்து அணியைச் சேர்ந்த இருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிந்ததையடுத்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த தென் ஆப்பிரிக்காவுடனான முதல் ஒருநாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும் இரு அணிகளும் தங்கியிருந்த விடுதியைச் சேர்ந்த இருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் நிலைமை முற்றிலும் மாறிப்போனது.

2-வது ஒருநாள் ஆட்டம் கேப் டவுனில் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2-வது ஒருநாள் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தெளிவான நிலை அறிந்த பிறகே ஒருநாள் தொடர் தொடங்கும் என்று இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தகவல் தெரிவித்துள்ளன. எந்தவொரு வீரரும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை எனத் தெரிந்தால் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய தினங்களில் இரு ஒருநாள் ஆட்டங்களும் நடைபெறும் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

ஒருநாள் தொடரை முடித்துக்கொண்டு தனி விமானத்தில் இங்கிலாந்து வீரர்கள் வியாழன் அன்று சொந்த ஊருக்குத் திரும்புவதாக உள்ளார்கள். தற்போதைய சூழலில் மீதமுள்ள இரு ஒருநாள் ஆட்டங்களும் நடைபெறாமல் ஒருநாள் தொடர் ரத்தாகவே அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT