செய்திகள்

ஜடேஜாவுக்குப் பதிலாக மாற்று வீரராகக் களமிறங்கிய சஹால்: ஆஸ்திரேலிய அணி அதிருப்தி

4th Dec 2020 04:32 PM

ADVERTISEMENT

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ஜடேஜாவுக்குப் பதிலாக மாற்று வீரராக சஹால் களமிறங்கியதற்கு ஆஸ்திரேலிய அணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் கான்பெராவில் இன்று நடைபெறுகிறது. 

ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் இழந்த இந்தியா, டி20 தொடரைக் கைப்பற்றுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ADVERTISEMENT

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 23 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார். ஜடேஜாவின் அதிரடியால் இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்தது. ஆஸி. தரப்பில் ஹென்ரிகஸ் 3 விக்கெட்டுகளும் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

இந்நிலையில் ஜடேஜா பேட்டிங் செய்தபோது ஹெல்மெட்டில் பந்து பட்டது. இதன் காரணமாக ஜடேஜாவை மருத்துவக்குழு பரிசோதனை செய்யவுள்ளது. இதையடுத்து மாற்று வீரராக சஹால் தேர்வானார். ஜடேஜா போல சஹாலும் சுழற்பந்து வீச்சாளர் என்பதால் அவர் நான்கு ஓவர்களை வீச அனுமதி உண்டு. ஜடேஜாவுக்கு மாற்று வீரர் தேவை என்கிற இந்திய அணியின் கோரிக்கையை ஆட்ட நடுவர் டேவிட் பூன் ஏற்றுக்கொண்டு, சஹாலை அனுமதித்தார். 

இந்த ஏற்பாட்டுக்கு ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து ஆட்ட நடுவரிடம் புகார் தெரிவித்து தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஹெல்மெட்டில் பந்து பட்ட பிறகும் தொடர்ந்து விளையாடினார் ஜடேஜா. அப்போது அவருக்குத் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. மேலும் இந்திய அணியின் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் நன்கு பந்துவீசினார்கள். இதன் காரணமாகவே ஜடேஜாவுக்குப் பதிலாக சஹாலை மாற்று வீரர் என்கிற பெயரில் இந்திய அணி களமிறக்கியுள்ளது என்று ஆஸி. பயிற்சியாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சமூகவலைத்தளங்களிலும் இந்திய அணியின் முடிவுக்கு ஆச்சர்யம் தெரிவித்து பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Tags : Jadeja helmet
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT