செய்திகள்

3-வது ஒருநாள்: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்!

2nd Dec 2020 10:25 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன், ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 4 முதல் டி20 தொடரும் டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன. முதல் இரு ஒருநாள் ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.

இந்நிலையில் 3-வது ஒருநாள் ஆட்டம் கேன்பராவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷுப்மன் கில், நடராஜன், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

ADVERTISEMENT

இதன்மூலம் தமிழக வீரரான நடராஜன், சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்.

2017 ஐபிஎல் போட்டியில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜனை ரூ. 3 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. அடுத்த வருடம் சன்ரைசர்ஸ் அணி ரூ. 40 லட்சத்துக்குத் தேர்வு செய்தது. யார்க்கர் பந்தை வீசுவது மிகவும் கடினம் என அனைவரும் எண்ணுகிற நிலையில் அதில் நிபுணத்துவம் பெற்றுள்ள நடராஜனின் பந்துவீச்சு, கிரிக்கெட் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் 71 யார்க்கர் பந்துகளை வீசியுள்ளார். 

ஐபிஎல் 2020 போட்டியில் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 8.02. 

காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து தமிழகச் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி விலகினார். இதனால் டி. நடராஜன் இந்திய டி20 அணிக்குத் தேர்வானார். இதன்பிறகு சைனிக்குக் காயம் ஏற்பட்டதால் மாற்று வீரராக ஒருநாள் அணிக்குள் நுழைந்த நடராஜன், இன்று இந்திய அணி வீரராக விளையாடி வருகிறார். இதனால் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

Tags : 3rd ODI Natarajan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT