கரோனா நோய்த்தொற்று சூழலால் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய காலத்தில் உள்நாட்டுப் போட்டிகளை நடத்த பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.
டிசம்பா் முதல் மாா்ச் வரையிலான காலகட்டத்தில் 6 இடங்களில் கரோனா பாதுகாப்பு வளையத்தை அமைத்து போட்டிகளை நடத்த பிசிசிஐ பரிசீலிக்கிறது. இதுதொடா்பாக மாநில கிரிக்கெட் சங்கங்களின் கருத்தை கோரி அவற்றுக்குக் கடிதம் எழுதியுள்ளது. அதில் 4 வாய்ப்புகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ரஞ்சி கோப்பை போட்டியை மட்டும் நடத்துவது முதல் வாய்ப்பாகும். சையது முஷ்டாக் அலி டி20 போட்டியை மட்டும் நடத்துவது 2-ஆவது வாய்ப்பாகும். 3-ஆவது வாய்ப்பின் படி ரஞ்சி கோப்பை மற்றும் சையது முஷ்டாக் அலி போட்டிகளை நடத்தவும், 4-ஆவது வாய்ப்பின் படி சையது முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹஸாரே போட்டிகளை நடத்தவும் பரிசீலிக்கப்படுகிறது.
இந்நிலையில் சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியை நடத்த பெரும்பாலான கிரிக்கெட் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. சில கிரிக்கெட் சங்கங்கள் மட்டும் ரஞ்சி கோப்பை மற்றும் சையது முஷ்டாக் அலி போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன.
மேலும் சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியுடன் இந்தப் பருவத்துக்கான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கவேண்டும் என்றும் பிசிசிஐக்குக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. டி20 போட்டியை வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் நடத்தி முடித்துவிட்டால் இதர போட்டிகளை நடத்துவது குறித்து பரிசீலனை செய்யலாம் என்று பிசிசிஐக்கு மாநில சங்கங்கள் கடிதம் எழுதியுள்ளன.