செய்திகள்

ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னாவுக்குப் பாராட்டு கடிதம் எழுதிய பிரதமர் மோடி!

21st Aug 2020 03:36 PM

ADVERTISEMENT

 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னாவைப் பாராட்டி பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த வாரம், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தோனியும் ரெய்னாவும் அறிவித்தார்கள். நேற்று, தோனியைப் பாராட்டி மோடி கடிதம் எழுதினார். இதையடுத்து ரெய்னாவுக்கும் அவர் பாராட்டுக் கடிதம் எழுதியுள்ளார்.

ரெய்னாவைப் பாராட்டி மோடி எழுதியதாவது:

ADVERTISEMENT

ஆகஸ்ட் 15 அன்று உங்கள் வாழ்வின் கடினமான முடிவை எடுத்துள்ளீர்கள். ஓய்வு என்கிற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன். ஏனெனில் நீங்கள் மிகவும் இளையவர், துடிதுடிப்பானவர். கிரிக்கெட் ஆடுகளத்தில் ஆடிய அற்புதமான இன்னிங்ஸுக்குப் பிறகு உங்கள் வாழ்வின் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கத் தயாராகியுள்ளீர்கள்.  

வருங்காலத் தலைமுறை உங்களை பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் தேவைப்படும்போது உபயோகமான பந்துவீச்சாளராகவும் இருந்ததை நினைவுகூரும். உங்களுடைய ஃபீல்டிங் ஊக்கம் அளிக்கக் கூடியது. ஃபீல்டிங்கினால் நீங்கள் சேமித்த ரன்களை எண்ணப் பல நாள்கள் ஆகும். 

2011 உலகக் கோப்பையில் நீங்கள் பங்களித்ததை இந்தியா மறக்காது. காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உங்களுடைய ஆட்டத்தை நான் மைதானத்தில் நேராகப் பார்த்தேன். இந்திய அணியின் வெற்றியில் அபாரமாகப் பங்களிப்பு செய்தீர்கள். உங்களுடைய அழகான கவர் டிரைவைக் காணும் வாய்ப்பு இனி ரசிகர்களுக்குக் கிடைக்காது. அன்றைய தினம் அதைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம்.

உங்களுடைய சாதனைகளுக்காக மட்டும் நீங்கள் விளையாடவில்லை. அணியின் சாதனைகளுக்காக விளையாடினீர்கள். எதிரணியின் விக்கெட் விழுந்தால் மிகவும் பரபரப்பு ஆவது நீங்களாகத்தான் இருக்கும்.

இனிமேல் உங்கள் நேரத்தை பிரியங்கா, கிரேசியா, ரியோவுக்காகச் செலவிடுவீர்கள் என எண்ணுகிறேன். விளையாட்டில் இந்தியா முன்னணியில் இருக்க நீங்கள் பங்களிப்பு செய்ததற்கும் இளைஞர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மோடியின் கடிதத்தை ட்விட்டரில் ரெய்னா பகிர்ந்துள்ளார். நாட்டுக்காக நாங்கள் விளையாடும்போது ரத்தத்தையும் வியர்வையையும் சிந்துகிறோம். இந்த நாட்டின் மக்களாலும் நாட்டின் பிரதமராலும் பாராட்டு கிடைக்கும்போது அதை விட பெரிது வேறொன்றுமில்லை. உங்கள் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளும் நன்றி என்றார்.

Tags : Modi Suresh Raina
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT