செய்திகள்

யு.எஸ். ஓபன் போட்டியில் பங்கேற்கிறார் ஜோகோவிச்!

14th Aug 2020 11:27 AM

ADVERTISEMENT

 

இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டியில் கலந்துகொள்வதாக உலகின் நெ.1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச் அறிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய் தொற்றின் தாக்கம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அந்தந்த நாடுகளில் நடைபெற இருந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, விம்பிள்டன் போட்டி இந்த ஆண்டு வரும் ஜூன் 29 முதல் - ஜூலை 12-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. எனினும், கரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் நிலையில் போட்டியை நடத்துவது தொடா்பாக கேள்வி எழுந்தது. இதையடுத்து இந்த வருட விம்பிள்டன் போட்டியை ரத்து செய்வதென முடிவெடுக்கப்பட்டது. மே 24- ஜூன் 7 தேதிகளில் நடைபெறவதாக இருந்த பிரெஞ்சு ஓபன் போட்டி செப்டம்பா் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டி காலி அரங்கில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 13 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

ADVERTISEMENT

கரோனா அச்சுறுத்தல் காரணமாக யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக உலகின் நெ.1 வீராங்கனை ஆஷ்லி பார்டி சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் பிரபல வீரர் நடாலும் இந்த வருட யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

இந்நிலையில் யு.எஸ். ஓபன் போட்டியில் கலந்துகொள்வதாக உலகின் நெ.1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச் அறிவித்துள்ளார். இந்த முடிவை எடுப்பது சவாலாக இருந்தது. ஆனாலும் மீண்டும் விளையாடுவது குறித்து மிகவும் ஆர்வமாக உள்ளேன் என அவர் கூறியுள்ளார். 

சமீபத்தில் காட்சி டென்னிஸ் போட்டியை நடத்தி மிகுந்த விமர்சனங்களுக்கு ஆளானார் ஜோகோவிச். அவரும் சில வீரர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதனால் தான் தற்போது பலரும் யு.எஸ். ஓபன் போட்டியில் பங்கேற்கத் தயங்கியுள்ளார்கள். எனினும் மீண்டும் களத்தில் தன் திறமையை நிரூபிக்க முன்வந்துள்ளார் ஜோகோவிச். 

ADVERTISEMENT
ADVERTISEMENT