உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றுக்குத் தேர்வான முதல் இந்திய வீரர்- அமித் பங்கால் சாதனை

ரஷியாவில் நடைபெற்றுவரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதியில் வென்று இறுதிச்சுற்றில் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார் அமித் பங்கால்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றுக்குத் தேர்வான முதல் இந்திய வீரர்- அமித் பங்கால் சாதனை


ரஷியாவில் நடைபெற்றுவரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதியில் வென்று இறுதிச்சுற்றில் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார் அமித் பங்கால்.
மற்றொரு இந்திய வீரரான மணீஷ் கௌசிக் (63 கிலோ எடைப் பிரிவு) அரையிறுதியில் தோல்வியைத் தழுவி  வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
ஆசிய சாம்பியனான 23 வயது அமித் பங்கால் 52 கிலோ எடைப் பிரிவில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றுள்ளார். போட்டித் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள அவர், கஜகஸ்தான் வீரர் சாகென் பிபோஸினோவை வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் எதிர்கொண்டார்.
இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நடைபெற்றது. இறுதியில் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் அமித் பங்கால் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளி வென்றவரான மணீஷ் கௌசிக், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்த முறை முதல்முறையாகப் பங்கேற்றார்.
அரையிறுதி வரை முன்னேறிய அவர், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள கியூபாவைச் சேர்ந்த ஆன்டி கோமஸ் க்ரூஸை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
0-5 என்ற புள்ளிக் கணக்கில் அவரிடம் வீழ்ந்தார் மணீஷ் கௌசிக்.
அரையிறுதிக்குத் தகுதி பெற்றதன் மூலம் அமித் பங்காலும், மணீஷ் கௌசிக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டனர்.
வெற்றி பெற்ற பிறகு அமித் பங்கால் கூறுகையில், அரையிறுதி மிகச் சிறப்பாக இருந்தது. நான் எண்ணியதைக் காட்டிலும் அதிக உழைப்பைக் கொடுத்தேன். இந்திய குத்துச்சண்டைக்கு இது மிகப் பெரிய சாதனையாகும். எனக்கு கிடைத்துவரும் ஆதரவுக்கு நன்றி. தங்கம் வெல்வதற்காக முழு ஈடுபாட்டுடன் இறுதிச்சுற்றில் களம் இறங்குவேன் என்றார்.
சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் ஷஹோபிதின் சொய்ரோவை எதிர்கொள்கிறார் அமித் பங்கால்.
2017ஆம் ஆண்டு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அமித் பங்கால் காலிறுதி வரை முன்னேறினார்.
மணீஷ் கௌசிக் கூறுகையில், அரையிறுதியில் முழு உழைப்பை செலுத்தினேன். இருப்பினும், ஏதோ தவறிழைத்திருக்கிறேன். இனி வரும் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவேன் என்றார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இதுவரை ஒன்றுக்கு மேற்பட்ட வெண்கலப் பதக்கத்தை வென்றதில்லை.
ஒரே போட்டியில் அரையிறுதிக்கு அமித் பங்காலும், மணீஷ் கௌசிக்கும் தகுதி பெற்று அந்த வரலாற்றைத் திருத்தி எழுதியுள்ளனர்.
இதற்கு முன்பு இந்திய குத்துச்சண்டை வீரர்கள் விஜேந்தர் சிங் (2009ஆம் ஆண்டு), விகாஸ்.கே (2011), சிவா தபா (2015), கௌரவ் பிதூரி (2017) ஆகியோர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com