டி20: விராட்டிடம் வீழ்ந்தது தென்னாப்பிரிக்கா: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

டி20: விராட்டிடம் வீழ்ந்தது தென்னாப்பிரிக்கா: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலியின் விஸ்வரூபத்தால் தென்னாப்பிரிக்க அணி 7  விக்கெட்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலியின் விஸ்வரூபத்தால் தென்னாப்பிரிக்க அணி 7  விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியுற்றது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா 149/5 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை குவித்து வென்றது.
3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் ஆடி வருகின்றன. தர்மசாலாவில் நடைபெறவிருந்த முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது ஆட்டம் மொஹாலியில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது. 
டி காக் 3-ஆவது அரைசதம்: தென்னாப்பிரிக்க தரப்பில் கேப்டன் குயிண்டன் டி காக்-ரீஸா ஹென்ட்ரிக்ஸ் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஹென்ட்ரிக்ஸ் 6 ரன்களுடன் தீபக் சாஹர் பந்தில் சுந்தரிடம் கேட்ச் தந்து வெளியேறினார். பின்னர் கேப்டன் டி காக்-டெம்பா பவுமா இணைந்து அதிரடியாக ஸ்கோரை உயர்த்தினர். 10-ஆவது ஓவர் முடிவில் 78/1 ரன்களை எடுத்திருந்தது தென்னாப்பிரிக்கா.
8 பவுண்டரியுடன் 37 பந்துகளில் 52 ரன்களை விளாசிய கேப்டன் டிகாக், நவ்தீப் சைனி பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் தந்து அவுட்டானார். இது அவரது 3-ஆவது டி20 அரைசதமாகும். அவரைத் தொடர்ந்து வந்த ரேசி வேன்டரை 1 ரன்னுடன் வெளியேற்றினார் ரவீந்திர ஜடேஜா.
அரைசதம் தவற விட்ட பவுமா: அதிரடியாக ஆடி வந்த டெம்பா பவுமா 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 49 ரன்களை எடுத்து, தீபக் சாஹர் பந்தில் அவுட்டானார். அப்போது 4 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்திருந்தது தென்னாப்பிரிக்கா. அவருக்கு பின் டேவிட் மில்லரை 18 ரன்களுடன் போல்டாக்கினார் ஹார்திக் பாண்டியா.
டுவைன் பிரிட்டோரியஸ் 10, அன்டில் பெலுக்வயோ 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை மட்டுமே எடுத்தது தென்னாப்பிரிக்கா.
இந்திய தரப்பில் தீபக் சாஹர் 2-22 விக்கெட்டுகளையும், சைனி, ஜடேஜா, பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்தியா அபார வெற்றி: 150 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய தரப்பில் ரோஹித் சர்மா-ஷிகர் தவன் களமிறங்கினர். 12 ரன்களுடன் ரோஹித் வெளியேறிய நிலையில், தவன்-கேப்டன் கோலி இணைந்து அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 40 ரன்களை எடுத்த தவன், ஷம்ஸி பந்தில் வெளியேறினார். அவருக்கு பின் வந்த இளம் வீரர் ரிஷப் பந்த் வழக்கம் போல் ஜான் பார்ட்டின் வீசிய பந்தை தவறாக கணித்து ஆடி 4 ரன்களுக்கு அவுட்டானார்.
விராட் கோலி விஸ்வரூபம்: 3 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 52 பந்துகளில் 72 ரன்களுடன் விராட் கோலியும், 16 ரன்களுடன் ஷிரேயஸ் ஐயரும் களத்தில் இருந்தனர்.
அபாரமாக ஆடிய விராட் தனது 22-ஆவது டி20 அரைசதத்தை பதிவு செய்தார். 19 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 151 ரன்களுடன்  வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் 3 ஆட்டங்கள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

சுருக்கமான ஸ்கோர்
தென்னாப்பிரிக்கா 149/5
டி காக் 52, பவுமா 49,
பந்துவீச்சு: தீபக் சாஹர் 2-22.
இந்தியா 151/3
கோலி 72, தவன் 40,
பந்துவீச்சு: ஷம்ஸி 1-19.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com