காஷ்மீர் நிலவரம் குறித்து மலாலாவின் கருத்து: துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை கண்டனம்!

பாகிஸ்தானுக்கு மீண்டும் திரும்பி அங்குள்ள நிலையை ஏன் எங்களுக்குக் காண்பிக்கக்கூடாது என்று ஹீனா சித்து கூறியுள்ளார்
காஷ்மீர் நிலவரம் குறித்து மலாலாவின் கருத்து: துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை கண்டனம்!

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்து மத்திய அரசு கடந்த மாதம் 5-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது. அதனால், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டன. காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இணையச் சேவைகள், தொலைபேசி, செல்லிடப்பேசி சேவைகள் ஆகியவை துண்டிக்கப்பட்டன. அதையடுத்து, காஷ்மீரில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் பகல்நேர கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. எனினும், வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளதால், தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி, ரோந்துப் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.  

பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா கடந்த 2012-ஆம் ஆண்டில் சிறுமியாக இருந்தபோது தலிபான் பயங்கரவாதிகள் சுட்டதில், தலையில் குண்டு பாய்ந்து சிகிச்சைக்காக பிரிட்டன் அழைத்துச் செல்லப்பட்டார். பாகிஸ்தானில் பெண் கல்வி வளர்ச்சிக்கு ஆதரவாக மலாலா விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலிபான் பங்கரவாதிகள் அவரை சுட்டனர். உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை எழுப்பிய இந்தச் சம்பவத்தையடுத்து, மலாலாவுக்கும், அவரது பெற்றோருக்கும் பிரிட்டன் அடைக்கலம் அளித்தது. மலாலா, பிரிட்டனில் தங்கி, படித்து வருகிறார். இந்தச் சூழலில், மலாலாவுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவின் சமூக சேவகர் கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்து வழங்கப்பட்டது. அந்த வகையில் மிகவும் இளைய வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையையும் மலாலாவுக்குக் கிடைத்தது.

இந்திய அரசின் காஷ்மீர் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகச் சமீபத்தில் சில ட்வீகளை வெளியிட்டார் மலாலா. அவர் கூறியதாவது: காஷ்மீரில் பணிபுரியும், அங்கு வசிக்கும் மக்களிடம் நான் பேசினேன். காஷ்மீர் மக்கள் வெளிஉலகின் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளார்கள். காஷ்மீரில் வசிக்கும் பெண்களின் நிலை குறித்து அறிய விரும்பினேன். கட்டுப்பாடுகளால் தொடர்பு கொள்வதில் சிரமம் உள்ளது. என்னிடம் பேசிய மூன்று காஷ்மீர் பள்ளிச் சிறுமிகளில் ஒருவர் இவ்வாறு சொன்னார் - என்னால் பள்ளிக்குச் செல்லமுடியாததால் கவலையுடன் உள்ளேன். ஆகஸ்ட் 12 அன்று நடைபெறவிருந்த என்னுடைய பள்ளித் தேர்வில் கலந்துகொள்ளமுடியவில்லை. என் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எழுத்தாளராக, சுதந்திரப் பெண்ணாக, வெற்றிகரமான காஷ்மீர் பெண்ணாக ஆக விரும்பினேன். ஆனால் இந்நிலை தொடர்ந்தால் அது கடினம் என்றார். காஷ்மீர் விவகாரம் குறித்து ஐநா தலையிடவேண்டும் என்றார் மலாலா. 

அவருடைய இந்தக் கருத்துகளுக்குத் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ஹீனா சித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.  உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக பாகிஸ்தானிலிருந்து வெளியேறி இதுவரை அங்கு வாழ்வதற்கு மீண்டும் நீங்கள் திரும்பவில்லை. ஆனால், காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க முன்மொழிகிறீர்கள். ஏனெனில் அங்குள்ள பள்ளிக் குழந்தைகளால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்பதற்காக. பாகிஸ்தானுக்கு மீண்டும் திரும்பி அங்குள்ள நிலையை ஏன் எங்களுக்குக் காண்பிக்கக்கூடாது என்று ஹீனா சித்து கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com