செய்திகள்

டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் புகார்: பிசிசிஐ ஊழல் தடுப்பு அமைப்பு தீவிர விசாரணை

17th Sep 2019 02:00 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (டிஎன்பிஎல்) போட்டியில் மேட்ச் பிக்ஸிங் புகார் தொடர்பாக 2 பயிற்சியாளர்கள் மற்றும் சில வீரர்கள் மீது பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவால் விசாரணை நடத்தப்படுகிறது.
பிசிசிஐ சார்பில் ஐபிஎல் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்படுகிறது. அதிலும் மேட்ச் பிக்ஸிங் புகார்கள், முறைகேடுகள் நடைபெற்றன.
இதுதொடர்பாக பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு தற்போது மீண்டும் இடம் பெற்றுள்ளனர்.
மாநில அளவில் உள்ளூர் டி20 லீக் போட்டிகள் நடத்தப்படும் நிலையில், டிஎன்பிஎல் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில் 
டிஎன்பிஎல் 2019 சீசன் போட்டியில் சில வீரர்கள் மற்றும் 2 பயிற்சியாளர்களை புக்கிகள் அணுகி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட வலியுறுத்தியதாகவும், இதுதொடர்பாக கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன எனவும் புகார் எழுந்தது.
டிஎன்பிஎல் போட்டிக்கு சிக்கல்: இந்த பிக்ஸிங் புகார் எதிரொலியாக டிஎன்பிஎல் போட்டிக்கு சிக்கல் எழுந்துள்ளது. 
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான டிஎன்பிஎல் போட்டியில் மொத்தம் 8 அணிகள் இடம் பெற்று ஆடுகின்றன.
இதற்கிடையே பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவின் அஜித் சிங் திங்கள்கிழமை கூறியதாவது: 
இந்த மேட்ச் பிக்ஸிங் புகாரில் எந்த சர்வதேச வீரர் பெயரும் அடிபடவில்லை. சில வீரர்கள் தங்களுக்கு கட்செவி அஞ்சல் மூலம் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து பிக்ஸிங்கில் ஈடுபடுமாறு தகவல்கள் வந்தன எனத் தெரிவித்தனர்.
அவர்கள் யார் என்பதை கண்டறிய முயற்சித்து வருகிறோம். வீரர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ள நிலையில், தகவல்களை அனுப்பியவர்கள் யார் என்பதை தீவிரமாக கண்டறிவோம். தகவலை பெற்ற எந்த வீரரும் எங்களுக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும் என்றார்.
இதற்கிடையே இந்த புகாரில் குறிப்பிட்ட அணி மீது சந்தேகம் எழுந்துள்ளது. அந்த அணி டிஎன்பிஎல் பட்டியலில் கடைசி 3 இடங்களில் ஒன்றாக உள்ளது. டிஎன்பிஎல் உரிமையாளர்கள் நடைமுறையில் சில சிக்கல்கள் உள்ளன.  வீரர்கள், பயிற்சியாளர்களை தேர்வு செய்வதில் பிரச்னை உள்ளது என பெயர் கூற விரும்பாத பிசிசிஐ அதிகாரி கூறியுள்ளார்.
மேலும் 2 பயிற்சியாளர்கள் இப்பிரச்னை தொடர்பாக விசாரணை வரம்பில் உள்ளனர். இதில் ஒரு பயிற்சியாளர் ஐபிஎல் புகாரில் சிக்கிய அணியுடன் தொடர்புடையவர். பின்னர் ரஞ்சி அணி ஒன்றுக்கும் பயிற்சி தந்தவர் ஆவர். 
அவர் எவ்வாறு ஐபிஎல் அணிகள் உதவி நடுவர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார் எனத் தெரியவில்லை. 
முதல் தர கிரிக்கெட் போட்டியை கூட ஒழுங்காக ஆடவில்லை அவர் எனத் தெரிகிறது.
அண்மையில் தான் டிஎன்பிஎல் அணிகளில் ஒன்றான காஞ்சி விபி வீரன்ஸ் அணி உரிமையாளர் விபி.சந்திரசேகர் கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
முறைகேடு தொடர்பாக கடும் நடவடிக்கை: டிஎன்பிஎல்: பிக்ஸிங் புகார் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎன்பிஎல் ஆட்சிக்குழு தலைவர் பிஎஸ்.ராமன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
கடந்த 2016-இல் இருந்து நடத்தப்படும் டிஎன்பிஎல் போட்டியில் கடும் விதிமுறைகளுடன் பிக்ஸிங் முறைகேடுகள் எழாமல் நடத்தப்படுகிறது. ஊழல் தடுப்பு அதிகாரிகள் போட்டியின் அனைத்து மட்டங்களிலும் கண்காணித்து வருகின்றனர். 
இந்த பிக்ஸிங் புகார் தொடர்பாக விசாரணை செய்ய டிஎன்சிஏ குழுவை அமைத்துள்ளது. அதன் அறிக்கை கிடைக்கும் வரை, எந்த அணி மீதோ, வீரர்கள், நிர்வாகிகள் மீதோ டிஎன்சிஏவால் எதையும் கூற முடியாது.
எனினும் கிரிக்கெட் ஆட்டத்தில் விதிகளை மீறிய செயல்பாடு, முறைகேடுகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT