வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

டெஸ்ட் போட்டிக்கும் ரோஹித் சர்மாதான் தொடக்க ஆட்டக்காரர்? எடுபடுமா கங்குலி யோசனை?

DIN | Published: 11th September 2019 11:01 PM


ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் ரோஹித் சர்மா, டெஸ்ட் ஆட்டத்திலும் தொடக்க ஆட்டக்காரராக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்ய பிசிசிஐ தேர்வுக் குழு நாளை கூடுகிறது. இதில், தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மாவைத் தேர்வு செய்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.

அண்மையில் மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் சொதப்பிய கேஎல் ராகுல், நீண்ட நாட்களாக ஃபார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். கடைசி 30 டெஸ்ட் இன்னிங்ஸில் அவர் வெறும் 664 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே, மாற்று தொடக்க ஆட்டக்காரருக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

மயங்க் அகர்வால் தனது இடத்தை உறுதிபடுத்தியுள்ள நிலையில், இந்திய அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிருத்வி ஷாவும் தடைக்காலத்தில் உள்ளார். அதேசமயம், நடுவரிசையில் 5-வது பேட்ஸ்மேனாக அஜின்கியா ரஹானேவும், 6-வது பேட்ஸ்மேனாக ஹனுமா விஹாரியும் மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் கலக்கி அசைக்க முடியாத வீரர்களாக உள்ளனர். எனவே, டெஸ்ட் ஆட்டங்களில் நடுவரிசை பேட்ஸ்மேனாக களமிறங்கி வரும் ரோஹித் சர்மாவை தொடக்க ஆட்டக்காரராக தேர்வு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ரோஹித் சர்மா தவிர்த்து தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு பெங்கால் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிமன்யு ஈஸ்வரனும் போட்டியில் உள்ளார். எனவே, ராகுலைத் தேர்வு செய்யாவிட்டால் மாற்று தொடக்க ஆட்டக்காரராக உள்ளூர் மற்றும் இந்தியா ஏ ஆட்டங்களில் ஜொலித்த ஈஸ்வரன் தேர்வு செய்யப்படலாம். குஜராத் அணியின் பிரியங்க் பன்சால் மற்றும் பஞ்சாபின் ஷுப்மன் கில் ஆகியோரும் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதேசமயம், முரளி விஜய் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளது.

இதனிடையே, தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத்தும், ராகுலின் மோசமான ஃபார்ம் கருதி, தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா பரிந்துரைக்கப்படலாம் என்று நேற்று தெரிவித்திருந்தார். எனவே, தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு ரோஹித் சர்மாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் படிக்க: ரோஹித் சர்மாவை டெஸ்ட்டில் தொடக்க வீரராகக் களமிறக்கவும்: செளரவ் கங்குலி யோசனை! 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, டெஸ்ட் போட்டிக்கும் ரோஹித் சர்மாவையே தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கலாம் என்று நீண்ட நாட்களாக கருத்து தெரிவித்து வருகிறார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வந்த சேவாக்கை, அப்போதைய கேப்டன் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினார். அதன்பிறகு அனைத்தும் வரலாறு. இந்த வரிசையில் ரோஹித் சர்மாவும் கங்குலியின் யோசனைப்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவாரா, சேவாக்கைப் போல் அவரும் ஜொலிப்பாரா என்பதைக் காலம்தான் பதில் சொல்லும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : கேஎல் ராகுல் Rohit Sharma opener Rohit test opener Ganguly backs Rohit Ganguly Sehwag story India vs South Africa Test தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சேவாக் கங்குலி ரோஹித் கங்குலி இந்தியா தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித்

More from the section

இந்திய ஏ அணிக்கு எதிராக 150 ரன்கள் குவித்தார் மார்க்ரம்!
டி20: புதிய சாதனை நிகழ்த்தியுள்ள விராட் கோலி!
டி20: விராட்டிடம் வீழ்ந்தது தென்னாப்பிரிக்கா: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
உலக ஆடவர் குத்துச்சண்டை அரையிறுதியில் அமித் பங்கால், மணிஷ்
உலக மல்யுத்தம் வினேஷ் போகட் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி