செய்திகள்

உலகக் கோப்பை கால்பந்து தகுதி ஆட்டம் ஆசிய சாம்பியன் கத்தாரை வெல்லுமா இந்தியா?

10th Sep 2019 01:04 AM

ADVERTISEMENT


உலகக் கோப்பை கால்பந்து தகுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆசிய சாம்பியன் கத்தாரை வெல்லுமா இந்திய அணி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2022 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெறுகிறது. இதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், இந்தியா, கத்தார், ஓமன், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் ஓரே இ பிரிவில் உள்ளன. 
முதல் ஆட்டத்தில் ஓமனுடன் மோதிய இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. முதல் பாதியில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றிருந்த நிலையில், ஆட்டம் முடிய கடைசி 5 நிமிடங்களில் ஓமன் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணியினர் அதிர்ச்சிக்கு தள்ளப்பட்டனர்.
இன்று மோதல்: இதன் தொடர்ச்சியாக ஆசிய சாம்பியன் கத்தாருடன் இரண்டாவது தகுதி ஆட்டம் செவ்வாய்க்கிழமை டோஹாவில் நடைபெறுகிறது. உலக தரவரிசையில் கத்தார் 63-ஆவது இடத்திலும், இந்தியா 103-ஆவது இடத்திலும் உள்ளன.  அதே நேரம் ஆப்கனை 6-0 என்ற கோல்கணக்கில் வென்ற உற்சாகத்தில் உள்ளது கத்தார்.
கடந்த ஜனவரி மாதம் ஆசிய சாம்பியன் ஆன கத்தார், அண்மையில் தென் அமெரிக்காவில் கோபா அமெரிக்கா போட்டியில் கடும் சவாலை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் இந்திய அணியும் அண்மைக்காலமாக ஆட்டத்தை மேம்படுத்தி வருகிறது. குரோஷியாவின் இகோர் ஸ்டிமாக் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய உத்திகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
இரு அணிகளும் கடைசியாக 2007-இல் நடைபெற்ற தகுதி ஆட்டத்தில் மோதிய போது, கத்தார் 6-0 என வென்றிருந்தது.
கேப்டன் சுனில் சேத்ரி கூறுகையில்: கத்தார் உடன் நடைபெறும் ஆட்டம் கடினமாக இருக்கும். எனினும் நாங்கள் கடும் சவாலை தருவோம். ஓமனுக்கு எதிராக செய்த தவறுகள் நடக்காமல் கவனமாக ஆடுவோம் என்றார்.
இந்தியாவும் பலமான அணியாக உருவெடுத்துள்ளதால், அதை லேசாக எடுத்துக் கொள்ள மாட்டம் என கத்தார் டிபன்டர் பெட்ரோ மிகியல் கூறியுள்ளார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT