இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 2-ஆம் நாள் ஆட்டத்தின் 3-வது செஷனும் போதிய வெளிச்சமின்மை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 497 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
மேலும் படிக்க: 3-ஆவது டெஸ்ட்: முதல் இன்னங்ஸில் 497 ரன்களுக்கு இந்தியா டிக்ளேர்
இதையடுத்து, 2-ஆம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளைக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இன்னிங்ஸின் இரண்டாவது பந்திலேயே டீன் எல்கர், முகமது ஷமி வேகத்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, 2-வது ஓவரை வீசிய உமேஷ் யாதவும் குயின்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால், அந்த அணி 8 ரன்களுக்குள் 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதையடுத்து, சுழற்பந்துவீச்சாளர்கள் 3 ஓவர்கள் வீசினர். எனினும், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, இன்றைய ஆட்டம் முடிவுக்கு வருவதாகவும் நடுவர்கள் அறிவித்தனர். இதனால், இன்றைய ஆட்டத்தின் 3-வது செஷனின் நிறைய ஓவர்களும் பாதிக்கப்பட்டது. 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து 9 ரன்கள் எடுத்துள்ளது. ஸுபேர் ஹம்ஸா ரன் ஏதும் எடுக்காமலும், டு பிளெசிஸ் 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.