செய்திகள்

இரட்டை ஆதாய பதவி விவகாரம்: கபில் தேவ் ராஜிநாமா!

2nd Oct 2019 12:54 PM | எழில்

ADVERTISEMENT

 

இரட்டை ஆதாய பதவி விவகாரம் தொடர்பாக முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான சிஏசிக்கு பிசிசிஐ நெறிகள் அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதையடுத்து தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார் கபில் தேவ்.

இரட்டை ஆதாய பதவி விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே முன்னாள் வீரர்கள் சச்சின், கங்குலி, லஷ்மண், திராவிட் ஆகியோரிடம் நெறிகள் அலுவலர் டி.கே. ஜெயின் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதுதொடர்பாக அவர்களும் விளக்கம் அளித்திருந்தனர்.

இந்நிலையில் புதிதாக கபில்தேவ் தலைமையிலான அன்ஷுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட சிஏசிக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரியை சிஏசி தேர்வு செய்தது. மபி கிரிக்கெட் சங்க ஆயுள் கால உறுப்பினர் சஞ்சீவ் குப்தா புகாரின் பேரில் இந்நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கபில்தேவ் வர்ணனையாளர், மின்னொளி விளக்குகள் நிறுவன உரிமையாளர், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க உறுப்பினர் பதவியில் உள்ளார். கெய்க்வாட்டும் சொந்தமாக அகாதெமி நடத்தி வருகிறார். பிசிசிஐ துணை கமிட்டியில் உறுப்பினராக உள்ளார். சாந்தா ரங்கசாமி பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிஏசியாக பதவி வகிப்பது இரட்டை ஆதாயம் தரும் பதவி ஆகும் என புகாரில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வரும் அக். 10-ஆம் தேதிக்குள் விளக்கம் தர வேண்டும் என நெறிகள் அலுவலர் நீதிபதி (ஓய்வு) டிகே. ஜெயின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இரட்டை ஆதாயம் பெறும்  பதவி விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டதையடுத்து பிசிசிஐ சிஏசி கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் சாந்தா ரங்கசாமி. மேலும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க இயக்குநர் பதவியில் இருந்து விலகி விட்டார். 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கபில் தேவும் சிஏசி பதவியிலிருந்து விலகியுள்ளார். நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய் மற்றும் பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய ராஜிநாமா குறித்த முடிவை கபில் தேவ் வெளியிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT