செய்திகள்

தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுக்கு அருமையான தொடக்கம்: மதிய உணவு இடைவேளை - இந்தியா 91/0

2nd Oct 2019 11:42 AM | எழில்

ADVERTISEMENT

 

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுபயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடா் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. 

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க அணியில் முத்துசாமி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம்  ஆகியுள்ளார். 

தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் மயங்க் அகர்வாலும் களமிறங்கினார்கள். இருவரும் மிகவும் கவனமாக விளையாடி முதல் 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்தார்கள். 19 ஓவர்கள் வரை பொறுமையாக விளையாடிய ரோஹித், மஹராஜ் வீசிய 20-வது ஓவரின் முதல் பந்தில் ஏறி வந்து சிக்ஸர் அடித்தார். அடுத்தச் சில ஓவர்கள் கழித்து பீடிட் பந்தில் சிக்ஸர் அடித்தார் மயங்க். அதே பந்துவீச்சாளர் பந்தில் தானும் ஒரு சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் ரோஹித் சர்மா. இதனால் 25-வது ஓவரின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் எடுத்தது. ரபடா, பிலாண்டர் பந்துவீச்சைப் பக்குவமாக எதிர்கொண்ட ரோஹித் சர்மா, சுழற்பந்துவீச்சில் அதிக ரன்கள் எடுத்தார். 

ADVERTISEMENT

84 பந்துகளில் தொடக்க வீரராக தனது முதல் அரை சதத்தை எடுத்தார் ரோஹித் சர்மா. இது இந்தியாவில் விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா எடுத்துள்ள தொடர்ச்சியான ஆறாவது அரை சதம். இதனால் தான் அவர் இந்த டெஸ்டில் எப்படியாவது விளையாட வேண்டும் என்று கோலியும் சாஸ்திரியும் முடிவெடுத்து அவரைத் தொடக்க வீரராகக் களமிறக்கியுள்ளார்கள். அவர்களின் முடிவு மிகச்சரியானது என்பதைத் தனது ஆட்டத்தின் மூலம் நிரூபித்தார் ரோஹித் சர்மா. 

முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 30 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 52, மயங்க் அகர்வால் 39 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள். இதனால் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு அருமையான தொடக்கம் அமைந்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT