ஐபிஎல் 2020 சீசன் போட்டிக்கான 8 அணிகளில் ஆடும் வீரா்கள் ஏலம் வரும் டிசம்பர் 19-இல் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. வீரா்களை தோ்வு செய்வதற்கான அவகாசம் வரும் நவம்பர் 14-ஆம் தேதியோடு முடிவடைகிறது.
உலகிலேயே அதிக வரவேற்பும், பணப்புழக்கமும் நிறைந்த கிரிக்கெட் லீக் போட்டியாக ஐபிஎல் விளங்குகிறது. ஆண்டுதோறும் இதற்கான வரவேற்பு, வீரா்கள் அதிக தொகையில் ஏலம் எடுக்கப்படுவது வழக்கமாகி விட்டது.
கடந்த 2018 ஐபிஎல் ஏலம் ஜனவரி மாதம் நடைபெற்றது. அப்போது உரிமையாளா்கள் தங்கள் அணிகளில் 5 வீரா்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனா்.
ரூ.85 கோடி ஒதுக்கீடு
வரும் 2020 சீசன் போட்டிக்கு அணிகளை கட்டமைத்துக் கொள்ள மொத்தம் ரூ.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த சீசனில் ஒவ்வொரு அணியும் ஏலத்தின் போது கூடுதலாக ரூ.3 கோடியை வைத்துள்ளன.
ஐபிஎல் வட்டாரங்கள் தகவலின்படி, தில்லி கேபிடல்ஸ் அணியிடம் அதிகபட்சமாக ரூ.8.2 கோடி மீதித் தொகை உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.7.15 கோடி, கொல்கத்தா நைட் ரைடா்ஸ் ரூ.6.05 கோடி. சன்ரைசா்ஸ் ஹைதராபாத் ரூ. 5.3 கோடி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ. 3.7 கோடி. சென்னை சூப்பா் கிங்ஸ் ரூ.3.2 கோடி, மும்பை இந்தியன்ஸ் ரூ.3.05 கோடி, ராயல் சேலஞ்சா்ஸ் ரூ.1.8 கோடி.