செய்திகள்

'இந்த பாலு பேசமாட்டான்.. பட்டாசுதான் பேசும்': தடைக்குப் பின் களமிறங்கிய பிரித்வி ஷா பஞ்ச்!

17th Nov 2019 08:44 PM

ADVERTISEMENT


8 மாத தடைக் காலத்துக்குப் பின் களமிறங்கி அரைசதம் அடித்த இந்திய வீரர் பிரித்வி ஷா, "எனது பேட் பேசும்" என சமிக்ஞை வெளிப்படுத்தியுள்ளார்.   

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா, தடை செய்யப்பட்ட டெர்புலைன் என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியதாகச் சோதனையில் தெரியவந்தது. இந்த ஊக்க மருந்து இருமலுக்கான மருந்தில் கலந்திருக்கும். பிரித்வி ஷா மருத்துவர்களின் அறிவுரையின்றித் தானாக இருமலுக்கான மருந்தை வாங்கி இந்த சிக்கலில் மாட்டினார். இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் முன்தேதியிட்டு மார்ச் 16 முதல் நவம்பர் 15 வரை அனைத்து வகையிலான கிரிக்கெட் ஆட்டங்களிலும் பங்கேற்க அவருக்கு 8 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.

ஊக்க மருந்தைப் பயன்படுத்திய புகாரில் பிரித்வி ஷா செய்த தவறு என்ன?: விளக்கும் மருத்துவர்!

இந்நிலையில், இந்த தடைக்காலம் நிறைவடைந்ததையடுத்து பிரித்வி சையது முஷ்டாக் அலி தொடரில் மும்பை அணிக்காக இன்று களமிறங்கினார். தடைக் காலத்துக்குப் பிறகு அவர் களமிறங்கும் முதல் ஆட்டம் என்பதால், அவர் மீது எதிர்பார்ப்பு இருந்தது. அதைப் பூர்த்தி செய்யும் வகையில், அவர் 39 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அதிரடி காட்டி மிரட்டியுள்ளார். அதேசமயம், அரைசதம் அடித்தவுடன் அவர் 'நான் பேசமாட்டேன், என்னுடைய பேட்தான் பேசும்' எனவும் அவர் சமிக்ஞை மூலம் வெளிப்படுத்தினார்.

ADVERTISEMENT

முதல் இரு ஆட்டங்களிலேயே ஒரு சதம், ஒரு அரைசதம் அடித்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டை அட்டகாசமாக தொடங்கிய பிரித்வி ஷாவுக்கு இந்த தடைக்காலம் பின்னடைவை ஏற்படுத்தியது. இவருடைய தடைக்கால இடைவெளியில், மயங்க் அகர்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தங்களது இடத்தை உறுதி செய்துவிட்டனர். எனவே, டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடும் லெவனில் இடம்பிடிக்க பிரித்வி ஷா கடினமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT