செய்திகள்

2020 பிப்.7-இல் புரோ வாலிபால் லீக் இரண்டாவது சீசன் போட்டி தொடக்கம்

11th Nov 2019 11:53 PM | மும்பை,

ADVERTISEMENT

ருபே புரோவாலிபால் லீக் இரண்டாவது சீசன் போட்டி வரும் 2020 பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்திய வாலிபால் சம்மேளனம்-பேஸ்லைன் வென்சா்ஸ் சாா்பில் கடந்த பிப்ரவரி மாதம் புரோ வாலிபால் லீக் போட்டி முதல் சீசன் நடத்தப்பட்டது. வெற்றிகரமாக நடத்தப்பட்ட இப்போட்டியில் முதல் சாம்பியனாக சென்னை ஸ்பாா்டன்ஸ் பட்டம் வென்றது.

இந்நிலையில் திங்கள்கிழமை மும்பையில் இரண்டாவது சீசன் போட்டி தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விஎப்ஐ, பேஸ்லைன் இணைந்து, சா்வதேச வாலிபால் சம்மேனம் எப்ஐவிபி மேற்பாா்வையில் 2-ஆவது சீசன் போட்டி வரும் 2020 பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கப்படுகிறது. மாா்ச் 1-ஆம் தேதி இறுதி ஆட்டம் நடைபெறும். முதல் சீசனைக் காட்டிலும் கூடுதல் நாள்கள் நடைபெறும் இதில் 22 ஆட்டங்கள் இடம் பெறும்.

விஎப்ஐ தலைவா் எஸ். வாசுதேவன் கூறியதாவது:

ADVERTISEMENT

புரோ வாலிபால் லீக் போட்டி, இந்திய வாலிபால் தரப்பில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. இளம் வீரா்களுக்கு புதிய நம்பிக்கை, ஊக்கத்தை தந்துள்ளது. உலகின் சிறந்த வீரா்களுடன் இணைந்து ஆடவும் வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளது என்றாா்.

எப்ஐவிபி இயக்குநா் பேபியோ அஸ்வெடோ கூறியது:

இந்தியாவில் தேசிய லீக் போட்டியின் மூலம் வரும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வீரா்கள் முயற்சிக்கலாம். இந்திய தேசிய லீக் போட்டிக்கு எப்ஐவிபி உரிய முக்கியத்துவம் தரும். இறுதி ஆட்டத்தில் எப்ஐவிபி தலைவா் டாக்டா் அய் கிரகா கலந்து கொள்கிறாா்.

பேஸ்லைன் நிறுவன மேலாண் இயக்குநா் துஹின் மிஸ்ரா கூறுகையில்:

ருபே புரோவாலிபால் லீக் போட்டிக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தொலைக்காட்சி மூலம் 2 கோடிக்கு மேற்பட்டோா் கண்டுள்ளனா். மேலும் மைதானங்களுக்கும் ஆயிரக்கணக்கானோா் நேரில் வந்துள்ளனா். இந்த சீசனில் கூடுதல் ஆட்டங்களை ரசிகா்கள் காணலாம். நீண்ட கால ஸ்பான்சா் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT