செய்திகள்

சாஹா், ஷிரேயஸால் தொடரை கைப்பற்றியது இந்தியா

11th Nov 2019 01:40 AM | ​நாகபுரி,

ADVERTISEMENT

தீபக் சாஹரின் ஹாட்ரிக், ஷிரேயஸ் ஐயர், ராகுலின் அரைசதங்களால் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது இந்தியா.
இறுதி ஆட்டம் நாகபுரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன் தொடர்ச்சியாக இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோஹித் சர்மா, ஷிகர் தவன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ரோஹித் 2 ரன்கள் அவுட்: ஆனால் தொடக்கமே அதிர்ச்சி தரும் வகையில் ரோஹித் சர்மாவை 2 ரன்களுக்கு போல்டாக்கினார் ஷபியுல். பின்னர் தவன்-கே.எல்.ராகுல் இணைந்து நிதானமாக ஸ்கோரை உயர்த்தினர். எனினும் 4 பவுண்டரியுடன் 19 ரன்களை எடுத்திருந்த ஷிகர் தவன், ஷபியுல் பந்துவீச்சில் மஹ்முத்துல்லாவிடம் கேட்ச் தந்து வெளியேறினார். 
ராகுல் 6-ஆவது அரைசதம் 52: மறுமுனையில் சிறப்பாக ஆடிய ராகுல் தனது 6-ஆவது டி20 அரைசதத்தை பதிவு செய்தார். 7 பவுண்டரியுடன் 35 பந்துகளில் 52 ரன்கள் விளாசிய ராகுல், அல் அமீன் பந்துவீச்சில் லிட்டன்தாஸிடம் கேட்ச் தந்து அவுட்டானார். 
தொடரும் ரிஷப் பந்தின் சோகம்: பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் இளம் வீரர் ரிஷப் பந்த் இந்த ஆட்டத்திலும் வெறும் 6 ரன்களுடன், செளமிய சர்க்கார் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். 
ஷிரேயஸ் ஐயர் முதல் அரைசதம் 62: அபாரமாக ஆடி வந்த இளம் வீரர் ஷிரேயஸ் ஐயர் தனது முதல் டி20 அரைசதத்தைப் பதிவு செய்தார். 5 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 33 பந்துகளில் 62 ரன்களை விளாசிய ஷிரேயஸ் ஐயர், செளமிய சர்க்கார் பந்துவீச்சில் லிட்டன்தாஸிடம் கேட்ச் தந்து வெளியேறினார். தொடக்கத்திலேயே ஷபியுல் பந்துவீச்சில் அதிருஷ்டவசமாக அவுட்டாகாமல் தப்பியதால், அதிரடி ஸ்கோரை எடுத்தார் ஷிரேயஸ்.
இந்தியா 174/5: 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களை குவித்தது இந்தியா. பாண்டே 22, துபே 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர். வங்கதேசத் தரப்பில் ஷபியுல் இஸ்லாம் 2-32, செளமிய சர்க்கார் 2-29 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
175 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி ஆரம்பத்திலேயே அதிர்ச்சியை சந்தித்தது. தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 2 பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கினாலும், 9 ரன்களுடன் தீபக் சாஹர் பந்தில், சுந்தரிட் கேட்ச் தந்து வெளியேறினார். 
சர்க்கார் கோல்டன் டக்: தீபக் சாஹர் பந்துவீச்சில் ஷிவம் துபேவிடம் கேட்ச் தந்து கோல்டன் டக்கானார் செளமிய சர்க்கார். இதைத் தொடர்ந்து முகமது நைம்-முகமது மிதுன் அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். தொடக்க வீரரான முகமது நைம் அபாரமாக ஆடி தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.
விக்கெட்டுகள் வீழ்ச்சி:  மறுமுனையில் விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்தன. முகமது மிதுன் 27 ரன்களுடனும், முஷ்பிகுர் ரஹிம் கோல்டன் டக் அவுட்டானார்கள்.
முகமது நைம் 81 முதல் அரைசதம்: 2 சிக்ஸர், 10 பவுண்டரியுடன் 48 பந்துகளில் 81 ரன்கள் விளாசிய முகமது நைமை போல்டாக்கினார் ஷிவம் துபே.
அவரைத் தொடர்ந்து அபிப் ஹூசைன் ரன் ஏதும் எடுக்காமல் துபே பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் தந்து அவுட்டானார்.
அப்போது 16 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களையே எடுத்திருந்தது வங்கதேசம்.
நிதானமாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் மஹ்முத்துல்லாவை 8 ரன்களுக்கு போல்டாக்கினார் சஹல்.  சாஹர் பந்துவீச்சில் 4 ரன்களுடன் வெளியேறினார் ஷபியுல் இஸ்லாம்.  முஸ்தபிஸுர் ரஹ்மான் 1, அமினுல் இஸ்லாம் 9 ரன்னுடன் சாஹர் பந்தில் அவுட்டானார்.  வங்கதேசம் 144 ஆல்அவுட்.
இறுதியில் 20 ஓவர்களில் விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை எடுத்து தோல்வியுற்றது வங்கதேசம். 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2-1 என தொடரையும் கைப்பற்றியது.
தீபக் சாஹர் 6 விக்கெட் அபாரம்: இளம் வீரர் தீபக் சாஹர் அபாரமாக பந்துவீசி 7 ரன்களை மட்டுமே விட்டுத் தந்து  6-விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் சர்வதேச விக்கெட்டை வீழ்த்திய துபே அபாரமாக பந்துவீசி 3-30 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஆட்ட மற்றும் தொடர் நாயகன் இரண்டு விருதுகளும் தீபக் வசமாயின.


சாஹர் ஹாட்ரிக்
வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். டி20 ஆட்டத்தில் முதல் ஹாட்ரிக் விக்கெட் பெற்ற இந்திய வீரர் என்ற சிறப்பையும் பெற்றார் அவர். 
ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார். அமினுல் இஸ்லாம், முஸ்தபிஸுர் ரஹ்மான், ஷபியுல் இஸ்லாம் ஆகியோர் அவரது ஹாட்ரிக் விக்கெட்டில் அடங்குவர். 
டெஸ்ட்டில் ஹர்பஜன் சிங், இர்பான் பதானும், ஒருநாள் ஆட்டங்களில் சேதன் சர்மா, கபில்தேவ், குல்தீப் யாதவ், முகமது ஷமியும், டி20-இல் தீபக் சாஹரும் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த இந்திய வீரர்கள் ஆவர்.
 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT