செய்திகள்

பார்தீவ் படேல் தலைமையிலான இந்தியா பி அணி தியோதர் கோப்பையை வென்றது!

4th Nov 2019 04:42 PM | எழில்

ADVERTISEMENT

 

இந்தியா சி அணியின் கீழ்வரிசை வீரர்கள் ஓரளவு முயன்றார்கள். 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் தொடர்ந்து போராடினார்கள். ஆனாலும் இந்தியா பி அணி தியோதர் கோப்பையை வெல்வதை அவர்களால் தடுக்க முடியவில்லை. 

ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா பி - இந்தியா சி அணிகளுக்கு இடையிலான தியோதர் கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா பி அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்தது. இதற்கு முக்கியக் காரணம் - கெதர் ஜாதவ். மூன்று முன்வரிசை பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாத நிலையில் நிதிஷ் ராணாவுடன் இணைந்து அருமையாகக் கூட்டணியை அமைத்தார் கெதர் ஜாதவ். ஒரு கட்டத்தில் 25-வது ஓவர்களின்போது 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது இந்தியா பி அணி. ஆனால் ஆட்டத்தின் போக்கைத் தன்னுடைய அருமையான ஆட்டத்தின் மூலம் மாற்றினார் கெதர் ஜாதவ். 

உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 52 ரன்கள் எடுத்தார் கெதர் ஜாதவ். அதற்குப் பிறகு அவர் 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியும் பெரிதாக எதுவும் ரன்கள் எடுக்க முடியவில்லை. விஜய் ஹசாரே போட்டியிலும் ஒரு அரை சதமும் எடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் அவரைக் கிட்டத்தட்ட மறந்தே போன நிலையில் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளார்.

ADVERTISEMENT

94 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்தார் ஜாதவ். இளம் வீரர் ஜெயிஸ்வால் 79 பந்துகளில் 54 ரன்களும் விஜய் சங்கர் 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்கள். கடைசிக்கட்டத்தில் களமிறங்கிய கெளதம் 10 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். 

இந்தியா சி அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வாலும் ஷுப்மன் கில்லும் களமிறங்கினார்கள். ஷுப்மன் 1 ரன்னிலும் மயங்க் அகர்வால் 28 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினார்கள். இதன்பிறகு 10 ரன்களுக்குள் விராத் சிங், சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஆட்டமிழந்ததால் 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா சி அணி. மூன்றாவதாகக் களமிறங்கிய ப்ரியம் கர்க் 74 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு இந்தியா பி அணியின் வெற்றி உறுதியானது. எனினும் பிறகு வந்த அக்‌ஷர் படேல், ஜலஜ் சக்‌ஷேனா, மார்கண்டே ஆகியோர் தங்களால் முடிந்த அளவுக்குப் போராடினார்கள். இதனால் இந்தியா சி அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது. ஜலஜ் சக்‌ஷேனா ஆட்டமிழக்காமல் 37 ரன்கள் எடுத்தார். அக்‌ஷர் படேல் 38, மார்கண்டே 27 ரன்கள் எடுத்தார்கள். இந்தியா பி அணித் தரப்பில் நதீம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இறுதிப் போட்டியை 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பார்தீவ் படேல் தலைமையிலான இந்தியா பி அணி, இந்த வருட தியோதர் கோப்பையை வென்றது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT