இந்தியாவுக்கு எதிராக டி20 ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது வங்கதேசம். இதுவரை ஆடிய 8 ஆட்டங்களில் இந்தியாவே வென்றிருந்த நிலையில், தனது முதல் வெற்றியைப் பெற்றது வங்கதேசம்.
முதலில் ஆடிய இந்திய அணி 148/6 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய வங்கதேச அணி 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.
வங்கதேச அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. முதல் ஆட்டம் புது தில்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
ரோஹித் அதிர்ச்சி: கேப்டன் ரோஹித் சர்மா-ஷிகர் தவன் களமிறங்கிய நிலையில், ஷைபுல் பந்துவீச்சில் 9 ரன்களுடன் எல்பிடபிள்யு ஆகி அவுட்டானார் ரோஹித் சர்மா. அவருக்கு பின் ஆட வந்த லோகேஷ் ராகுலும் நிலைக்கவில்லை. 15 ரன்களுடன் அமினுல் இஸ்லாம் பந்துவீச்சில் மஹ்முத்துல்லாவிடம் கேட்ச் தந்து வெளியேறினார்.
ஷிகர் தவன் 41: ஷிரேயஸ் ஐயர் 22 ரன்களுக்கும், அறிமுக வீரர் ஷிவம் துபே 1 ரன்னுக்கும் அவுட்டாகி வெளியேறினர்.
1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 42 பந்துகளில் 41 ரனக்ள் விளாசி ஷிகர் தவன் ரன் அவுட்டானார்.
பின்னர் ரிஷப் பந்த் 27 ரன்களுக்கு அவுட்டாக்கி வெளியேற்றினார் ஷைபுல். அப்போது 6 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களையே எடுத்திருந்தது இந்தியா.
வாஷிங்டன் சுந்தர் அதிரடி: கடைசி கட்டத்தில் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக 2 சிக்ஸர்களையும், க்ருணால் பாண்டியா 1 சிக்ஸரையும் விளாசியதால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை எடுத்தது இந்தியா. சுந்தர் 14, க்ருணால் பாண்டியா 15 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
வங்கதேச தரப்பில் ஷைபுல் இஸ்லாம் 2-36, அமினுல் இஸ்லாம் 2-22, அபிப் ஹுசேன் 1-11 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
149 ரன்கள் வெற்றி இலக்கு: பின்னர் களமிறங்கிய வங்கதேசத்துக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அதன் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 7 ரன்களுடன் தீபக் சாஹர் பந்துவீச்சில் வெளியேறினார்.
இந்நிலையில் 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 26 ரன்களை சேர்த்திருந்த நைம், சஹல் பந்துவீச்சில் தவனிடம் கேட்ச் தந்து வெளியேறினார். செளமிய சர்க்கார்-முஷ்பிகுர் ரஹிம் இணைந்து அதன் பின்னர் ஸ்கோரை உயர்த்தினர். 39 ரன்களுடன் செளமிய சர்க்காரை போல்டாக்கினார் கலில். அப்போது 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன்களை எடுத்திருந்தது வங்கதேசம்.
கலீல் பந்துவீச்சில் 4 தொடர் பவுண்டரிகள்: கடைசி 12 பந்துகளில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கலில் அகமதுவின் பந்துவீச்சில் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை விளாசினார் முஷ்பிகுர் ரஹிம். இது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
முஷ்பிகுர் அரைசதம்: 1 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 43 பந்துகளில் 60 ரன்களுடன் தனது அரைசதத்தை பதிவு செய்தார் முஷ்பிகுர் ரஹிம். கேப்டன் மஹ்முத்துல்லா 15 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது வங்கதேசம்.
இந்திய தரப்பில் தீபக், கலீல் அகமது, சஹல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 7 விக்கெட் வித்தியாசத்தில் முதல் டி20 ஆட்டத்தை வென்ற வங்கதேசம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
தனி நபராக வெற்றியை ஈட்டித் தந்த முஷ்பிகுர் ரஹிம் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
டி20 இல் அதிக ரன்கள்: ரோஹித் சாதனை
டி20 ஆட்டத்தில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் ரோஹித் சர்மா. கேப்டன் விராட் கோலி 2450 ரன்களுடன் இதில் முதலிடத்தில் இருந்தார். 2443 ரன்களுடன் இருந்த ரோஹித் சர்மா, வங்கதேசத்துடன் நடைபெற்ற ஆட்டத்தில் 9 ரன்களை எடுத்த நிலையில், 2452 ரன்களுடன் முதலிடத்தைப் பெற்று புதிய சாதனையை நிகழ்த்தினார்.
காற்று மாசிலும் திரண்ட ரசிகர்கள்
புது தில்லியில் அபாயகரமான அளவில் காற்று மாசின் தரம் இருந்த போதிலும், கிரிக்கெட் மேல் கொண்ட ஈடுபாட்டால், அதைப் பொருள்படுத்தாமல் அருண் ஜேட்லி மைதானத்தில் 25,000-க்கு மேற்பட்ட ரசிகர்கள் குழுமியிருந்தனர்.