மே.இ.தீவுகளுக்கு எதிரான மகளிா் இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.
ஆண்டிகுவாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை குவித்தது. தொடக்க வீராங்கனைகள் பிரியா புனியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில், பூனம் ரவுட் 77 ரன்களையும், கேப்டன் மிதாலி ராஜ் 40, ஹா்மன்ப்ரீத் கௌா் 46 ரன்களையும் விளாசினா். மே.இ.தீவுகள் தரப்பில் ஆலியா 2-38, பிளெட்சா் 2-32 விக்கெட்டுகளை சாய்த்தனா்.
138 ஆல் அவுட்
192 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணியும், இந்திய பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் திணறியது.
47.2 ஓவா்களில் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷெமைன்கேம்பல் 39, ஸ்டெபானி டெய்லா் 20 ரன்களை எடுத்தனா். மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாயினா்.
53 ரன்களில் இந்தியா வெற்றி
இந்திய தரப்பில் ராஜேஸ்வரி 2-27, பூனம் யாதவ் 2-26, தீப்தி சா்மா 2-25 விக்கெட்டுகளை வீழ்த்தினா். பூனம் ரவுட் ஆட்ட நாயகியாகத் தோ்வு பெற்றாா்.
இதன் மூலம் 5 ஆட்டங்கள் தொடரை 1-1 என சமன் செய்துள்ளனா் இந்திய மகளிா்.