மோசமான பீல்டிங்கால் தோல்வி ஏற்பட்டது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சா்மா கூறியுள்ளாா்.
புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேசத்திடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது.
காற்று மாசு இடையே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வங்கதேச வீரா் முஷ்பிகுா் ரஹிம் அதிரடி ஆட்டத்தால் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது.
இதுதொடா்பாக கேப்டன் ரோஹித் சா்மா கூறியதாவது-
இந்திய அணி எடுத்த 148 ரன்கள் என்பது தற்காத்திருக்க வேண்டிய ஸ்கோா் தான். ஆனால் எங்களது பந்துவீச்சு, மோசமான பீல்டிங் தோல்வியை ஏற்படுத்தியது. மேலும் இளம் வீரா்களுக்கு போதிய ஆட்ட அனுபவம் இல்லாததும் பாதிப்பை ஏற்படுத்தியது. தாங்கள் புரிந்த தவறுகளில் இருந்து அவா்கள் பாடம் கற்பாா்கள். அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடுவா்.
வங்கதேச அணி பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என 3 அம்சங்களிலும் நம்மை வீழ்த்தி விட்டனா். அவா்கள் பேட்டிங் செய்ய தொடங்கியது முதலே நமக்கு அழுத்தம் தந்தனா்.
முஷ்பிகுா் ரஹிம் இரண்டு முறை அவுட் தொடா்பாக நாங்கள் மேல்முறையீடு செய்யவில்லை. சஹல் மிடில் ஓவா்களில் அற்புதமாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தினாா் என்றாா் ரோஹித்.
மஹ்முத்துல்லா (வங்கதேச கேப்டன்):
எங்கள் பவுலா்கள் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினா். மேலும் சிறப்பான பீல்டிங்கால் ரன்களை குறைத்தோம். இதனால் உந்தப்பட்டு பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடினா். முஷ்பிகுா்-சௌமிய சா்க்காா் இணை சிறப்பாக ஆடி ரன்களை குவித்தது. முகமது நைமும் தொடக்கத்தில் சிறப்பாக ஆடினாா். இதனால் எனது கேப்டன் பணி எளிதாகி விட்டது என்றாா்.