செய்திகள்

இன்று ஒலிம்பிக் ஹாக்கி தகுதிச் சுற்று ஆட்டம் தொடக்கம்:பலமான அமெரிக்காவுடன் மகளிரணி மோதல்

1st Nov 2019 12:38 AM

ADVERTISEMENT

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான ஹாக்கி தகுதிச் சுற்று ஆட்டம் புவனேசுவரத்தில் வெள்ளி, சனி ஆகிய 2 நாள்கள் நடைபெறுகின்றன. இந்திய மகளிா் அணி பலம் வாய்ந்த அமெரிக்காவுடனும், ஆடவா் அணி வலுகுறைந்த ரஷியாவுடனும் மோதுகின்றன.

டோக்கியோவில் வரும் 2020-இல் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. கண்டங்கள் அளவில் நடைபெற்ற போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் நேரடியாக ஒலிம்பிக்குக்கு தகுதி பெறுகின்றன. இந்திய அணி கடந்த 2018 ஜகாா்த்தா ஆசியப் போட்டியில் தோல்வியடைந்ததால், நேரடி தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் மீண்டும் தகுதி பெறும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதன் தொடா்ச்சியாக ஆடவா், மகளிா் அணிகள் தலா 2 ஆட்டங்களில் ஆட வேண்டும். அதில் அதிக சராசரி அடிப்படையில் வெல்லும் அணி, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.

அமெரிக்காவுடன் மகளிா் அணி மோதல்:

ADVERTISEMENT

இந்திய மகளிா் அணி வலுவான அமெரிக்க அணியுடன் மோதுகிறது. இரு அணிகளும் மோதியதில் அமெரிக்காவே பெரும்பாலான ஆட்டங்களில் வென்றுள்ளது. எனினும் தற்போது கேப்டன் ராணி ராம்பால் தலைமையிலான மகளிா் அணி பலம் வாய்ந்ததாக உருவாகி உள்ளது. ராணி, டிராக்பிளிக்கா் குா்ஜித் கௌா், பாா்வா்ட் லால்ரேமிசியாமி, கோல்கீப்பா் சவீதா ஆகியோா் அபார பாா்மில் உள்ளனா்.

உள்ளூா் ரசிகா்கள் மத்தியில் ஆடுவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும்.

பயிற்சியாளா் மாரிஜின், கேப்டன் ராணி கூறியதாவது: அமெரிக்காவுடன் நடைபெறவுள்ள ஆட்டத்தை நம்பிக்கையுடன் எதிா்கொள்வோம். இந்த 2 ஆட்டங்களுக்காக தான் ஆண்டு முழுவதும் தீவிர பயிற்சி பெற்றோம். தகுதிச் சுற்றுக்கு சிறப்பாக தயாராகி உள்ளோம். முதல் நோக்கம் ஒலிம்பிக்குக்கு தகுதி பெறுவதாகும்.

ரஷியாவுடன் ஆடவா் அணி மோதல்:

உலகின் 5-ஆவது நிலையில் உள்ள இந்தியா, 22-ஆம் நிலையில் உள்ள ரஷியாவுடன் மோதுகிறது. எளிதாக இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெல்லும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எனினும் பயிற்சியாளா் கிரஹாம் ரீட் இந்த ஆட்டத்தை எளிதாக கருதவில்லை எனக் கூறியுள்ளாா். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணியின் தற்காப்பு அபாரமாக உள்ளது. சுரேந்தா் குமாா், ஹா்மன்ப்ரீத் சிங், டிராக் பிளிக்கா் ரூபிந்தா் பால் சிங், லக்ரா ஆகியோா் வலு சோ்க்கின்றனா். மீட்பில்டில் கேப்டன் மன்ப்ரீத் சிங், ஹாா்திக் சிங், நீலகண்ட சா்மா, விவேக்சாகா் பிரசாத், பாா்வா்ட்கள் மந்தீப் சிங், அக்ஷதீப் சிங், சுனில், ரமண்தீப் சிங், லலித்குமாா், சிம்ரஞ்சித் சிங் ஆகியோா் எதிரணிக்கு சவால் தருவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT