ஊக்க மருந்து சோதனையில் தோல்வி: 4 ஆண்டுகள் தடையை எதிர்கொள்ளும் கோமதி மாரிமுத்து!

பி மாதிரி பிரிவு சோதனையிலும் அவர் தோல்வியுற்றால் 4 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படும்...
ஊக்க மருந்து சோதனையில் தோல்வி: 4 ஆண்டுகள் தடையை எதிர்கொள்ளும் கோமதி மாரிமுத்து!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து (30) ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவருக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் திருச்சி அருகேயுள்ள முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி, தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, ராசாத்தி தம்பதியின் மகள் கோமதி. மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணி, அடிப்படை வசதிகளில்லாத கிராமம், பள்ளிப் படிப்புக்கு கூட 15 கி.மீ. தொலைவு நடந்தே செல்லும் நிலை இருந்தது அவருக்குள் தடகளப் போட்டிக்கான உத்வேகத்தை அளித்தது. கடுமையான பயிற்சிகள் மூலம் தடகள வீராங்கனை ஆனார்.

ஆசிய தடகளப் போட்டியில், 30 வயதான கோமதி மாரிமுத்து 800 மீ. தூரத்தை 2:02.70 என்கிற நேரத்தில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். சீனா வீராங்கனையை முந்திக்கொண்டு கோமதி தங்கம் வென்றது வியப்பை ஏற்படுத்தியது. இந்தப் போட்டியில் பெரும்பாலான நேரங்களில் 3-ம் இடத்தில் இருந்த கோமதி கடைசி 100 மீ. ஓட்டத்தில் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி தங்கம் வென்றார். இதனால் செப்டம்பரில் தோஹாவில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் அவர் தகுதியடைந்துள்ளார்.

800 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றதால் கோமதியை 4x400 மீ. தொடர் ஓட்டத்திலும் பங்கேற்கச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது இந்தியத் தடகள சம்மேளனம். இன்று சக வீராங்கனைகளுடன் போலந்துக்குச் சென்று பயிற்சியில் ஈடுபட இருந்தார் கோமதி.

இந்நிலையில், ஊக்க மருந்துப் பரிசோதனையில் கோமதி மாரிமுத்து தோல்வியடைந்துள்ளார். இதையடுத்து அவருடைய போலந்துப் பயணம் ரத்தாகியுள்ளது.

ஏ மாதிரி பிரிவு சோதனையில் தான் கோமதி தோல்வியடைந்துள்ளார். பி மாதிரி பிரிவு சோதனையிலும் அவர் தோல்வியுற்றால் 4 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படும்.

பெடரேஷன் கோப்பை மற்றும் ஆசிய தடகளப் போட்டி என இரண்டு போட்டிகளிலும் எடுக்கப்பட்ட ஊக்க மருந்து சோதனைகளில் அவர் தோல்வியடைந்துள்ளார். நான்ட்ரோலோன் என்கிற ஸ்டீராய்ட் மருந்தை அவர் உட்கொண்டிருப்பது பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. 

இந்தியத் தடகள சம்மேளனத்தின் தலைவர் அடிலி சுமரிவாலா இந்த விவகாரம் குறித்து அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

இரு பரிசோதனைகளிலும் தோல்வியடைந்துள்ளதால் அவருக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பி மாதிரி சோதனையின் முடிவுகளைக் கேட்க அவருக்கு உரிமை உள்ளது. அந்தச் சோதனையில் அவர் வெற்றி பெற்றுவிட்டால் இடைக்காலத் தடை நீக்கப்படும். இல்லாவிட்டால் அவர் நான்காண்டு தடையை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com