சனிக்கிழமை 21 செப்டம்பர் 2019

உலகக் கோப்பையில் தோனியின் பங்கு முக்கியமானது: ரவி சாஸ்திரி

DIN | Published: 22nd May 2019 01:08 AM


இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் பங்கு, உலகக் கோப்பை தொடரில் அதிமுக்கியமானது என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறினார்.
மும்பையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
விக்கெட் கீப்பராக அவர் பல ஆண்டுகளாக மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கேட்ச் பிடிப்பது மட்டுமல்ல; ரன் அவுட் செய்தல், ஸ்டம்பிங் செய்தல் என அவரது பணி அபரிமிதமானது.
அவரைக் காட்டிலும் சிறந்த விக்கெட் கீப்பர் அணியில் கிடையாது.
ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டார். அவரது அதிரடி ஆட்டத்தை கண்டு வியந்தேன். உலகக் கோப்பை தொடரில் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். ரவுண்ட் ராபின் சுற்று ஆட்டங்கள் இருக்கும் என்பதால் இந்தத் தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். ஆப்கன், வங்கதேசம் ஆகிய அணிகள் வலிமையாக மாறிவிட்டன. மே.இ.தீவுகள் அணி மற்ற அணிகளைக் காட்டிலும் எப்போதும் வலிமையானதுதான். இந்திய அணி கடந்த 5 ஆண்டுகளில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி வித்தியாசமாக எதையும் சிந்தித்து செயல்படாமல், உலகக் கோப்பை தொடரில் விளையாடுகிறோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். முழு ஆற்றலையும் வீரர்கள் வெளிப்படுத்தினால் கோப்பை நமது வசம் என்றார் ரவி சாஸ்திரி.
தோனிதான் துருப்புச் சீட்டு
உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தோனி துருப்புச் சீட்டாக விளங்குவார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாகீர் அப்பாஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கிரிக்கெட்டில் அதிக அனுபவம் கொண்ட வீரர் தோனி.
அவர் ஒரு ஜீனியஸ். கேப்டனாக தனது திறமையை நிரூபிக்க கோலியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றார்.
பாகிஸ்தான் அணி, இதுவரை உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியுடன் மோதி ஜெயித்ததில்லை. இந்த முறை அந்த அணி ஜெயிக்குமா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, இந்தியாவுடன் உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்துள்ளது.
ஆனால், எந்த அணியையும் பாகிஸ்தான் வீழ்த்தும் திறமை கொண்டது. அந்தந்த சூழ்நிலையைப் பொறுத்து வெற்றி, தோல்வி அமையும். தனிப்பட்ட முறையில், இரு அணிகளும் மோதும் ஆட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று பதிலளித்தார் ஜாகீர் அப்பாஸ்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 16ஆம் தேதி மோதுகிறது. டி20 உலகக் கோப்பை (2007), ஒரு நாள் உலகக் கோப்பை (2011), ஆசிய கோப்பை (2010, 2016) உள்ளிட்டவற்றை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது. 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலராக ஆர்.சி.மீனா
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றுக்குத் தேர்வான முதல் இந்திய வீரர்- அமித் பங்கால் சாதனை
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: சுஷில் குமார் தோல்வி
தஞ்சாவூரில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் தொடக்கம்
டி20 உலகக் கோப்பைக்கு எனது தேர்வு ரிஷப் பந்த்: சுனில் கவாஸ்கர்