திங்கள்கிழமை 20 மே 2019

பஞ்சாப் ஆறுதல் வெற்றி

DIN | Published: 06th May 2019 01:46 AM

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 பஞ்சாப் மாநிலம், மொஹாலி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தீர்மானித்தது பஞ்சாப்.
 அதன்படி, சிஎஸ்கே வீரர்கள் முதலில் பேட்டிங் செய்தனர்.
 டூ பிளெஸ்ஸிஸ், ஷேன் வாட்சன் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். ஒரு பக்கம் பிளெஸ்ஸிஸ் பந்தை சிதறிடிக்க, அவருக்கு தோள்கொடுத்தார் வாட்சன். எனினும், சாம் கர்ரன் வீசிய 5ஆவது ஓவரின் முதல் பந்தில் "போல்டு' ஆனார் வாட்சன் (7 ரன்கள்). இதையடுத்து, சுரேஷ் ரெய்னா களம் கண்டார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
 பல்வேறு உத்திகளைக் கையாண்டும் பஞ்சாப் பந்துவீச்சாளர்களால் இந்த இணையைப் பிரிக்க முடியவில்லை.
 13ஆவது ஓவரின் முதல் பந்தில் அரை சதம் பதிவு செய்தார் பிளெஸ்ஸிஸ்.
 இதைத் தொடர்ந்து 15ஆவது ஓவரில் சுரேஷ் ரெய்னாவும் அரை சதம் கடந்தார்.
 இருவரும் அணியின் ஸ்கோரை மூன்றிலக்கத்துக்கு இட்டுச் சென்றனர். அணியின் ஸ்கோர் 150ஆக இருந்தபோது, அதாவது 16.4ஆவது ஓவரில் சாம் கர்ரன் வீசிய பந்தில் ஷமியிடம் கேட்ச் ஆனார் ரெய்னா. 38 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 53 ரன்களை அவர் சேர்த்திருந்தார்.
 பிளெஸ்ஸிஸுக்கு தோனி தோள் கொடுத்தார். சதம் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிளெஸ்ஸிஸ் 18.4ஆவது ஓவரில் 96 ரன்களில் (55 பந்துகளில் 4 சிக்ஸர், 10 பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார்.
 அம்பதி ராயுடுவும், கேதார் ஜாதவும் சொற்ப ரன்களில் நடையைக் கட்ட, பிராவோ (1 ரன்), தோனி (12 பந்துகளில் 10 ரன்கள்) ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தனர். இவ்வாறாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிஎஸ்கே 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்களை சேர்த்தது.
 பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக சாம் கர்ரன் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்கள் வீசியபோதிலும் விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை.
 பஞ்சாப் வெற்றி: 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
 தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட லோகேஷ் ராகுல் அபாரமாக விளையாடி 38 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.
 அவர் 5 சிக்ஸர்களையும், 7 பவுண்டரிகளையும் விரட்டினார். அதிரடி வீரர் கிறிஸ் கெயில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 28 பந்துகளில் 28 ரன்களை சேர்த்தார்.
 இவர்கள் இருவரையும் ஹர்பஜன் சிங் தனது சுழலில் சாய்த்தார்.
 மயங்க் அகர்வால் 7 ரன்களிலும், விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரன் 36 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மன்தீப் சிங்கும் (11 ரன்), சாம் கர்ரனும் (6 ரன்) அணியை வெற்றி இலக்குக்கு அழைத்துச் சென்றனர்.
 இவ்வாறாக 18 ஓவர்களில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்ட பஞ்சாப் அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. 14 ஆட்டங்களில் விளையாடியுள்ள பஞ்சாப் 6 இல் வெற்றியும், 8 இல் தோல்வியும் கண்டு 12 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தை பிடித்தது.
 சிஎஸ்கே அணி 14 ஆட்டங்களில் விளையாடி 9இல் வெற்றியும், ஐந்தில் தோல்வியும் கண்டு 18 புள்ளிகளுடன் உள்ளது. சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டதால் இந்தத் தோல்வி அந்த அணியை பாதிக்காது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஓய்வுக்குப் பிறகு...: ரகசியத்தை வெளிப்படுத்திய தோனி! (விடியோ)
புற்றுநோய்க்கு இரண்டு வயது மகளைப் பறிகொடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்!
உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் மூன்று அதிரடி மாற்றங்கள்!
இத்தாலி ஓபன்: நடால், பிளிஸ்கோவா சாம்பியன்
யுவராஜ் சிங் ஓய்வு?