பெங்களூரு அபார வெற்றி

பெங்களூரு, மே 4: ஹைதராபாதை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு.
பெங்களூரு அபார வெற்றி

பெங்களூரு, மே 4: ஹைதராபாதை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு. அதன் வீரர்கள் ஷிம்ரன் ஹெட்மயர் 75, குர்கீரத் சிங் 65 அபாரமாக ஆடி வெற்றிக்கு வித்திட்டனர்.
 பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்ற தீவிரத்தில் உள்ள ஹைதராபாதும், போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட பெங்களூரும் மோதிய ஆட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
 டாஸ் வென்ற பெங்களூரு பவுலிங்கை தேர்வு செய்தது. ஹைதராபாத் தரப்பில் களமிறங்கிய ரித்திமன் சாஹா, மார்டின் கப்டில் ஆகியோர் அதிரடியாக ஆடினர். இதனால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 4 பவுண்டரியுடன் 20 ரன்களை சேர்த்த சாஹாவை வெளியேற்றினார் சைனி.
 மார்டின் கப்டிலும் தலா 2 சிக்ஸர், பவுண்டரியுடன் 30 ரன்களுக்கு அவுட்டானார். நிலைத்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட மணிஷ் பாண்டேயும் 9 ரன்களுடன் வெளியேறினார்.
 பின்னர் கேன் வில்லியம்ஸன்-விஜய் சங்கர் நிதானமாக ரன்களை சேர்த்தனர். 3 சிக்ஸருடன் 27 ரன்களை விளாசி விஜய் சங்கரும், 3 ரன்களுடன் யுசுப் பதானும், 4 ரன்களுடன் நபியும், 1 ரன்னுடன் ரஷித் கானும் அவுட்டாயினர்.
 கேன் வில்லியம்ஸன் 12-ஆவது அரைசதம்: அபாரமாக ஆடிய கேப்டன் கேன் வில்லியம்ஸன் தனது 12-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார். 4 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 43 பந்துகளில் 70 ரன்களைவிளாசி வில்லியம்ஸனும், 7 ரன்களுடன் புவனேஸ்வரும் களத்தில் இருந்தனர்.
 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை குவித்தது ஹைதராபாத்.
 பெங்களூரு தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3-24, நவ்தீப் சைனி 2-39, சஹல் 1-24, குல்வந்த் 1-29 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியும் தொடக்கத்தில் சரிவை சந்தித்தது. பார்த்திவ் பட்டேல் 0, விராட் கோலி 16, டி வில்லியர்ஸ் 1 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர்.
 ஷிம்ரன் ஹெட்மயர் முதல் அரைசதம்: ஷிம்ரன் ஹெட்மயர் அபாரமாக ஆடி தனது முதல் ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார்.
 மேலும் குர்கீரத் சிங்கும் 39 பந்துகளில் தனது 2-ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். 6 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 47 பந்துகளில் 75 ரன்களை விளாசி வெளியேறினார் ஷிம்ரன்.
 குர்கீரத் சிங் 65: அவருக்கு இணையாக சிறப்பாக ஆடிய குர்கீரத் சிங்கும் 1 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 48 பந்துகளில் 65 ரன்களை விளாசி அவுட்டானார். கலீல் அகமது பந்துவீச்சில் டக் அவுட்டானார் வாஷிங்டன் சுந்தர்.
 ஹைதராபாதுக்கு நம்பிக்கை தரும் வகையில் கலீல் அகமது ஓரே ஓவரில் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
 எனினும் 6 பந்துகளில் 6 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் உமேஷ் யாதவ் தொடர்ந்து 2 பவுண்டரிகளை விளாசி பெங்களூரை வெற்றி பெறச் செய்தார்.
 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 178 ரன்களுடன் வென்றது பெங்களூரு. கிராண்ட்ஹோம் 3, உமேஷ் யாதவ் 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர். ஹைதராபாத் தரப்பில் கலீல் அகமது 3-37, புவனேஸ்வர் குமார் 2-24, ரஷித் கான் 1-44 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 பெங்களூரு அணி தனது கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்தது.
 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கொல்கத்தா அணியின் ஆட்டத்தின் முடிவைப் பொறுத்தே ஹைதராபாதின் பிளே ஆஃப் கனவு நனவாகும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com