2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் விவரம்

கேப்டன் விராட் கோலி தலைமையிலான தற்போதைய அணியில் உலகக் கோப்பை வென்ற 2 பேர், முதன்முதலாக பங்கேற்கும் 7 வீரர்கள் உள்ளனர்.
2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் விவரம்

2019 ஐசிசிஒரு நாள் உலகக் கோப்பையில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் பற்றிய முழு விவரக்குறிப்பு:
 கேப்டன் விராட் கோலி தலைமையிலான தற்போதைய அணியில் உலகக் கோப்பை வென்ற 2 பேர், முதன்முதலாக பங்கேற்கும் 7 வீரர்கள் உள்ளனர். இந்த உலகக் கோப்பையில் பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது.
 கேப்டன் விராட் கோலி

19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம் பெற்றுத் தந்த கோலி, கடந்த 2008-இல் அறிமுகமானார். 30 வயதான கோலி, கடந்த 2011-இல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் உறுப்பினர். 222 ஆட்டங்களில் 10533 ரன்களை குவித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 92.59, சராசரி 59.51 ஆகும். ஆகும். 39 சதங்கள், 49 அரைசதங்கள் அவரது கணக்கில் அடங்கும்.
 துணை கேப்டன் ரோஹித் சர்மா

வலதுகை பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா (31), அணியின் துணை கேப்டனாகவும், மற்றொரு தொடக்க வீரராகவும் உள்ளார். கடந்த 2007-இல் அணியில் அறிமுகம் ஆகியவர், தொடக்கத்தில் நிதானமாக ஆடி,, 50 ரன்களை அடித்தவுடன் விஸ்வரூபம் எடுப்பது வழக்கம். 201 ஆட்டங்களில் ஆடி 7808 ரன்களுடன், 88.33 ஸ்டிரைக் ரேட்டை தன் வசம் வைத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 264 ஆகும். 3 இரட்டை சதம், 22 சதங்கள், 39 அரைசதங்கள் ரோஹித் கணக்கில் அடங்கும்.
 லோகேஷ் ராகுல்

வலது கை பேட்ஸ்மேனான 26 வயது ராகுல் கடந்த 2016 அறிமுகமானார். 13 ஒருநாள் ஆட்டங்களில் மொத்தம் 317 ரன்களை சேர்த்துள்ளார். அவரது ரன் சராசரி 80.66 ஆகும். அதிகபட்ச ஸ்கோர் 100. மேலும் 2 அரைசதங்களை அடித்துள்ளார் ராகுல். ஸ்டிரைக் ரேட் 80.66 ஆகும்.
 விஜய் சங்கர்

28 வயதான விஜய்சங்கர் ஆல் ரவுண்டராக இடம் பெற்றுள்ளார். நிகழாண்டு ஆஸி.அணிக்கு எதிராக அறிமுகமானார். நியூஸிலாந்து தொடரில் 45 ரன்களை விளாசினார். ஹார்திக் பாண்டியாவுடன், ஆல்ரவுண்டர் இடத்தில் உள்ளார் விஜய் சங்கர். இவரது ஸ்டிரைக் ரேட் 70.31 ஆகும்.
 ஷிகர் தவன்

இடதுகை பேட்ஸ்மேனான ஷிகர் தவன் (33), கடந்த 2010-இல் இந்திய அணியில் அறிமுகமானார். ஒருநாள் அணியில் தவறாமல் ஆடி வரும் அவர், 123 ஆட்டங்களில் 5178 ரன்களை விளாசியுள்ளார். அதிகபட்சமாக 137 ரன்கள், ஸ்டிரைக் ரேட் 93.49 என மிகவும் முக்கியமான தொடக்க வீரராக உள்ளார். அவரது ரன் கணக்கில் 15 சதங்கள், 27 அரைசதங்கள் அடங்கும்.
 தோனி

37 வயதான தோனி இந்திய அணிக்கு உலகக் கோப்பைகளை பெற்றுத் தந்தவர். கடந்த 2005-இல் அறிமுகமானவர். 338 ஆட்டங்களில் ஆடி 10415 ரன்களை குவித்துள்ளார். ஹெலிகாப்டர் ஷாட்களுக்கும், ஸ்டம்புகளுக்கு பின்னால் துரிதமாக செயல்படுவதற்கும் பெயர் பெற்றவர். 10 சதங்கள், 70 அரைசதங்கள் அவரது கணக்கில் அடங்கும். தோனியின் ஸ்டிரைக் ரேட் 87.69 ஆகும். சராசரி 50.8 ஆகும்.
 ஹார்திக் பாண்டியா

ஹார்திக் பாண்டியா (25) மற்றொரு ஆல்ரவுண்ட டராக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2017-இல் அறிமுகமான பாண்டியா 45 ஆட்டங்களில் 731 ரன்களை குவித்தார். அதிகபட்ச ஸ்கோர் 83 ஆகும். மேலும் 44 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதிரடி பேட்டிங்குக்கு பெயர் பெற்றவர் ஹார்திக். ஸ்டிரைக் ரேட் 116.59 ஆகும்.
 ஜஸ்ப்ரீத் பும்ரா

ஜஸ்ப்ரீத் பும்ரா (25), தற்போது ஒருநாள் ஆட்டங்களில் சந்தேகமின்றி தலைசிறந்த பவுலராக திகழ்கிறார். வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளரான அவர், கடந்த 2016-இல் அறிமுகமானார். 44 ஒருநாள் ஆட்டங்களில் 78 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 5-27 அவரது சிறந்த பங்களிப்பாகும். 1 முறை 5 விக்கெட்டும், 4 முறை 4 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். கடைசி ஓவர்களில் பிசகின்றி யார்க்கர் பந்துகளை வீசி எதிரணி வீரர்களை நிலைகுலையச் செய்வார். வெவ்வேறு வகை வேகம், அளவுகளில் பந்துவீசுவார் பும்ரா.
 முகமது ஷமி

28 வயது முகமது ஷமி, வலது கை மிதவேகப்பந்து வீச்சாளர். கடந்த 2013-இல் அறிமுகமான அவர், 59 ஆட்டங்களில் 108 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 6 முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவரது சிறந்த பங்களிப்பு 4-35 ஆகும். சிறந்த வேகம்-விக்கெட்டுகளை வீழ்த்துவதில் சிறப்பு வாய்ந்தவர் ஷமி.
 தினேஷ் கார்த்திக்

கடந்த 2004-இல் அறிமுகமான அவர் விக்கெட் கீப்பர் இடத்துக்கான போட்டியில் தோனியுடன் அவ்வப்போது இருந்தார். 91 ஆட்டங்களில் 1738 ரன்களை குவித்துள்ள தினேஷ், 9 அரைசதங்களை தன் வசம் கொண்டுள்ளார்.
 தற்போதை அணியில் கடைசி ஓவர்களில் அடித்தும் ஆடும் நபராக இடம் பெற்றுள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 73,71 ஆகும்.
 கேதார் ஜாதவ்

கேதார் ஜாதவ் (33) கடந்த 2011-இல் அறிமுகமானார். நெருக்கடியான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும், ரன்களை விளாசுவதிலும் நிபுணத்துவம் பெற்றவர் கேதார். 54 ஆட்டங்களில் 1002 ரன்களை சேர்த்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 120 ஆகும். பந்துவீச்சில் 25 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 106.82.
 குல்தீப் யாதவ்

24 வயதான சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கடந்த 2017-இல் அறிமுகமானார். இந்திய அணியின் குறைந்தபட்ச ஓவர் ஆட்டங்களில் பிரதான இடம் பெற்றுள்ளார். சைனா மேன் என அழைக்கப்படும் குல்தீப் 39 ஆட்டங்களில் 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிறந்த பவுலிங்காக 6-25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 4 முறை 4 விக்கெட்டுகளையும் 1 முறை 5 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.
 யுஜவேந்திர சஹல்

மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரான சஹல் (28) கடந்த 2016-இல் அறிமுகமானார். 40 ஆட்டங்களில்71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 6-42 விக்கெட் அவரது சிறந்த பங்களிப்பாகும். 2 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குல்தீப் யாதவுடன், சிறந்த இணையாக உள்ளார் சஹல்.
 ரவீந்திர ஜடேஜா


 30 வயதான ரவீந்திர ஜடேஜா, பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஆல்ரவுண்டர் திறமைகளை பெற்றவர். கடந்த 2009-இல் அறிமுகமான அவர், 147 ஆட்டங்களில் 171 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 5-36 அவரது சிறந்த பங்களிப்பாகும். பேட்டிங்கில் 1990 ரன்களை சேர்த்துள்ள அவரது அதிகபட்ச ஸ்கோர் 87 ஆகும். ஜடேஜா அணியின் பொக்கிஷம் போல் உள்ளார். ஸ்டிரைக் ரேட் 84.97 ஆகும்.
 புவனேஸ்வர் குமார்

மிதவேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் (29) கடந்த 2012-இல் அறிமுகமானார். ஸ்விங் பந்துவீச்சு அவரது பெரிய பலமாகும். 103 ஆட்டங்களில் 114 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 1 முறை 5 விக்கெட், 3 முறை 4 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 5-42 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பங்களிப்பாகும். கடைசி ஓவர்களில் பேட்ஸ்மேன்களை சீரான அளவு, வேகத்தில் பந்துவீசி திணறச் செய்வார்.
 -பா.சுஜித்குமார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com