14,700 பேருக்கு நீச்சல் பயிற்சி: இலக்கை எட்டுவதில் சிக்கல்!

தமிழகம் முழுவதுமுள்ள மாவட்ட விளையாட்டு அரங்க நீச்சல் குளங்களின் மூலம் 14,700 பேருக்கு நீச்சல் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள
 திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் பயிற்சி பெறும் மாணவர்கள்.
 திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் பயிற்சி பெறும் மாணவர்கள்.


தமிழகம் முழுவதுமுள்ள மாவட்ட விளையாட்டு அரங்க நீச்சல் குளங்களின் மூலம் 14,700 பேருக்கு நீச்சல் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் நீச்சலுக்கான முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வு இல்லாததால் இலக்கை எட்டுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் நீச்சல் குளம் பராமரிக்கப்பட்டு வருகிறது. சென்னை நகரில் மட்டும் 3 நீச்சல் குளங்கள் உள்ளன.  குளோரினேஷன் செய்தல், மின்சார கட்டணம், ஊழியர்களுக்கான ஊதியம் என மாதம் ரூ.1 லட்சம் செலவில் இந்த நீச்சல் குளங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நீச்சல் பயிற்சிக்கு கட்டணம்:  கோடை விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், நீச்சல் பயிற்சி முகாம் நடத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 12 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு, நீச்சல் குளம் அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்ப ஒருவருக்கு ரூ.2,500, ரூ.1,500, ரூ.1200, ரூ.1000 வீதம் 4 விதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 
போதிய விழிப்புணர்வு இல்லை:  தமிழகத்தில் கிணறு, குளம், ஆறு, வாய்க்கல் உள்ளிட்ட நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனாலும், நீச்சலின் முக்கியத்துவம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. அழிந்து வரும் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளித்து அதனை மேம்படுத்துவதற்கு முயற்சி மேற்கொண்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நீச்சலின் மீதும் கவனம் செலுத்தி வருகிறது. 
14,700 பேர் இலக்கு: கோடை விடுமுறையில், குறிப்பாக பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நீச்சல் பயிற்சி முகாமை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயிற்சி அளிக்க வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை இலக்காக நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கான 12ஆயிரத்தில் 50 சதவீதத்தை கூட எட்ட முடியாத நிலையில், நிகழாண்டு 14,700 பேருக்கு பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
சலுகைகள் தந்தும் ஆர்வமில்லை: இதுதொடர்பாக விளையாட்டு அலுவலர் ஒருவர் கூறியது:  நகர் பகுதிகளில் 80 சதவீதம் பேருக்கு நீச்சல் தெரியாத நிலை உள்ளது. தனியார் நீச்சல் குளங்களில் ஒரு மணி நேரம் குளிப்பதற்கு மட்டுமே ரூ.120 முதல் ரூ.150 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயிற்சி அளிக்க வேண்டுமெனில் ரூ.3ஆயிரத்திற்கும் கூடுதலான கட்டணம் வசூலிக்கின்றனர். 
சலுகைகள் வழங்கினாலும், நீச்சல் கற்றுக் கொள்வதற்கு மாணவர்களும், பெற்றோர்களும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. தேர்தல் நடத்தை விதிமுறையால் ஏப்ரல்  மாதம் முகாம் தொடங்க முடியாத நிலையில், மே ஒரு மாதத்தில் மட்டும்  நிர்ணயிக்கப்பட்ட இலக்கை  எட்டுவது நிகழாண்டிலும் சாத்தியமில்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com