தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டி: 203 ரன்களில் சுருண்ட இலங்கை 

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வெள்ளியன்று நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு 203 ரன்களை இலக்காக இலங்கை நிர்ணயம் செய்துள்ளது. 
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டி: 203 ரன்களில் சுருண்ட இலங்கை 

செஸ்டர் லீ ஸ்டிரிட்: உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வெள்ளியன்று நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு 204 ரன்களை இலக்காக இலங்கை நிர்ணயம் செய்துள்ளது. 

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க அணியில் இரு மாற்றங்கள். டுவைன் பிரிடோரியஸும் டுமினியும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். இலங்கை அணியில் சுரங்கா லக்மல் இடம்பெற்றுள்ளார்.

அரையிறுதிக்குத் தகுதி பெற முடியாத தென் ஆப்பிரிக்காவுக்கு ஆரம்பமே அசத்தலாக அமைந்தது. முதல் பந்திலேயே கருணாரத்னே ரபடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு அட்டகாசமான கூட்டணி அமைந்தது இலங்கை அணிக்கு. குசால் பெரேராவும் அவிஷ்கா ஃபெர்ணாடோவும் வேகமாக ரன்கள் குவித்தார்கள். பவுண்டரிகள் நிறைய கிடைத்தன. 9 ஓவர்களில் 57 ரன்கள் வந்த நிலையில் அடுத்த ஓவரில் தேவையில்லாத ஷாட்டில் பிரிடாரியஸிடம் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார் அவிஷ்கா. அவர் 30 ரன்கள் எடுத்தார். இதுதான் சரிவுக்குத் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. இந்த விக்கெட்டின் மூலம் புத்துணர்ச்சி அடைந்த தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள் இலங்கை பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி அளித்தார்கள்.

குசால் பெரேரா 30 ரன்களில் பிரிடாரியஸ் பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதன்பிறகு ரன்கள் எடுக்கும் வேகம் முற்றிலும் குறைந்தது. 29 பந்துகளை எதிர்கொண்டு 11 ரன்கள் மட்டும் எடுத்த மேத்யூஸ், 11 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு நிதான ஆட்டக்காரரான குசால் மெண்டிஸ், 51 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

டுமினி பந்துவீச வந்தார். முதல் பந்திலேயே தனஞ்ஜெயா டி சில்வாவை 24 ரன்களில் வீழ்த்தினார். பொறுப்பற்ற முறையில் இலங்கை பேட்ஸ்மேன்கள் விளையாடியதால் விக்கெட்டுகள் தகுந்த இடைவெளியில் விழுந்துகொண்டிருந்தன. 

தொடர்ந்து ஜீவன் மென்டிஸ் 18 ரன்னிலும், திசரா பெரேரா 21 ரன்னிலும், உதனா 17 ரன்னிலும், மலிங்கா 4  ரன்னிலும் என அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்

இறுதியில் இலங்கை அணி 49.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்களை எடுத்துள்ளது. கடைசியில் லக்மல் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

தென்ஆப்பிரிக்க அணி சார்பாக பிரிட்டோரியஸ் மற்றும் கிறிஸ் மோரிஸ் தலா 3 விக்கெட்டுகளும், ரபடா 2 விக்கெட்டுகளும், டுமினி மற்றும் பெலக்வாயோ 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்க அணி தற்போது விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com