நியூஸி. வெற்றி நடைக்கு பாக். தடை: 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 
நியூஸி. வெற்றி நடைக்கு பாக். தடை: 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 
இதன்மூலம், இந்த உலகக் கோப்பை போட்டியின் தொடக்கம் முதல் தோல்வியின்றி விளையாடி வந்த நியூஸிலாந்தின் வெற்றி நடைக்கு பாகிஸ்தான் தடை போட்டுள்ளது. 
பிர்மிங்ஹாமில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் 49.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. 
பாகிஸ்தான் தரப்பில் பாபர் ஆஸம் சதமடித்து (101*) இறுதிவரை நிலைக்க, அவருடன் வலுவான கூட்டணி அமைத்து அணியின் வெற்றிக்கு உதவினார் ஹாரிஸ் சோஹைல் (68). 
முன்னதாக, மழை காரணமாக ஆட்டம் சற்று தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட் செய்யத் தீர்மானித்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும்  ஷாஹீன் அஃப்ரிதி பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். 
தொடக்க வீரர் மார்டின் கப்டில் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை அடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் களத்துக்கு வர, மறுமுனையில் தொடக்க வீரர்களில் ஒருவரான காலின் மன்ரோ 12 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டார். 
தொடர்ந்து வந்த ராஸ் டெய்லர் 3 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் டாம் லதாமும் ஒரு ரன்னுக்கு பெவிலியன் திரும்பினார். 
83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நியூஸிலாந்து தவித்த நிலையில், களம் புகுந்தார் ஜேம்ஸ் நீஷம். மறுமுனையில் நிதானமாக ரன்கள் சேர்த்த வில்லியம்சன் 4 பவுண்டரிகள் உள்பட 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களம் கண்ட கிராண்ட்ஹோம், நீஷமுடன் இணைந்தார்.
நியூஸிலாந்தை மீட்டெடுத்த இந்த பார்ட்னர்ஷிப், 6-ஆவது விக்கெட்டுக்கு 132 ரன்கள் குவித்தது. கடைசி விக்கெட்டாக 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 64 ரன்கள் சேர்த்து கிராண்ட்ஹோம் வெளியேறினார். இவ்வாறாக 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து. நீஷம் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 97, மிட்செல் சேன்ட்னர் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிதி 3, முகமது ஆமிர் 1, ஷாதாப் கான் 1 விக்கெட் வீழ்த்தியிருந்தனர். 
பாபர் அசத்தல்: இதையடுத்து 238 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய பாகிஸ்தானில் தொடக்க வீரர்கள் சோபிக்கவில்லை.
இமாம் உல் ஹக் 19 ரன்களுக்கு வெளியேற, ஃபகர் ஸமான் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3-ஆவதாக களம் கண்ட பாபர் ஆஸம் நிதானமாக ரன்கள் சேர்க்க, மறுமுனையில் முகமது ஹஃபீஸ் 32 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டார்.
பின்னர் வந்த ஹாரிஸ் சோஹைல், பாபருடன் இணைந்தார். இந்தக் கூட்டணி பாகிஸ்தானை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. இருவரும் அரைசதம் கடந்த நிலையில், சோஹைல் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 68 ரன்களுக்கு கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். 
பாபர்-சோஹைல் கூட்டணி 4-ஆவது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்தது. பின்னர் வந்த கேப்டன் சர்ஃப்ராஸுடன் அணியை வெற்றி பெறச் செய்தார் பாபர். 
49.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து வென்றது பாகிஸ்தான். பாபர் ஆஸம் 11 பவுண்டரிகளுடன் 101, சர்ஃப்ராஸ் அகமது 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட், ஃபெர்குசன், கேன் வில்லியம்சன் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.


1992 போல்...
இந்த உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இதுவரை சந்தித்த வெற்றி-தோல்வி வரிசையானது, கடந்த 1992-ஆம் ஆண்டு அந்த அணி சந்தித்த அதே வரிசையாகும். அந்த ஆண்டில் பாகிஸ்தான் சாம்பியன் ஆகியிருந்தது.
சுருக்கமான ஸ்கோர்
நியூஸிலாந்து
50 ஓவர்களில் 237/6
நீஷம்-97*, கிராண்ட்ஹோம்-64, வில்லியம்சன்-41
பந்துவீச்சு: 
ஷாஹீன்-3/28, ஷாதாப்-1/43, ஆமிர்-1/67


பாகிஸ்தான்
49.1 ஓவர்களில் 241/4
பாபர்-101*, சோஹைல்-64, ஹஃபீஸ்-32
பந்துவீச்சு: 
வில்லியம்சன்-1/39, போல்ட்-1/48, ஃபெர்குசன்-1/50
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com