இந்தியாவுக்கு பின்னடைவு: ஷிகர் தவனுக்கு பெருவிரல் காயம்: 3 ஆட்டங்களில் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு

இந்தியாவின் மூத்த தொடக்க வீரர் ஷிகர் தவன் கை பெருவிரல் காயத்தால் அடுத்த 3 உலகக் கோப்பை ஆட்டங்களில் ஆடமாட்டார் என
ஷிகர் தவனின் பெருவிரல் காயத்துக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்.
ஷிகர் தவனின் பெருவிரல் காயத்துக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்.


இந்தியாவின் மூத்த தொடக்க வீரர் ஷிகர் தவன் கை பெருவிரல் காயத்தால் அடுத்த 3 உலகக் கோப்பை ஆட்டங்களில் ஆடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்லது. இது இந்திய அணிக்கு பலத்த பின்னடைவாக அமைந்துள்ளது.
ஒருநாள் ஆட்டங்களில் ரோஹித் சர்மா-தவன் இணை இந்தியாவின் பல வெற்றிகளுக்கு வித்திட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவன் அபாரமாக ஆடி 16 பவுண்டரியுடன் 117 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.
சிறந்த பார்மில் உள்ள தவனுக்கு ஆஸி. பவுலர் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தால் இடதுகை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. எனினும் அதைப் பொறுத்துக் கொண்டு தவன் ஆட முயன்றார். இதையடுத்து அவருககு லீட்ஸில் உள்ள மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. ஆஸி.க்கு எதிராக பீல்டிங் செய்ய தவன் வரவில்லை. இதனால் அவரால் அடுத்த 2 ஆட்டங்களுக்கு ஆட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும் பின்னடைவு:
ஷிகர் தவன் ஆட முடியாதது, இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகும். அவருக்கு மாற்று ஆட்டக்காரரை அணி நிர்வாகம் இன்னும் அறிவிக்கவில்லை. முழுமையான சோதனை முடிவுகள் வெளிவந்தால் தான் இதுகுறித்து அணியுடன் சென்றுள்ள தேர்வாளர்கள் எம்எஸ்கே. பிரசாத், தேவங்க்காந்தி, சரண்தீப் சிங் முடிவெடுப்பர் எனத் தெரிகிறது.
ராகுலுக்கு வாய்ப்பு:
பதிலி வீரர்களாக அம்பதி ராயுடு, ரிஷப் பந்த், அக்ஸர் பட்டேல், இஷாந்த்சர்மா, நவ்தீப் சைனி ஆகியோர் உள்ளனர். 
இவர்களில் யாரும் தொடக்க வீரர்களாக அறிவிக்கப்பட வாய்ப்பு இல்லை எனக் கருதப்படுகிறது. மாற்று வாய்ப்பாக கேஎல்.ராகுலை தொடக்க வீரராக களமிறக்கலாம். மிடில் ஆர்டரில் ராகுலுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் களமிறங்கக் கூடும்.
உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பையில் மொத்தம் 20 ஆட்டங்களில் 6 சதங்கள், 4 அரைசதங்கள் உள்பட 1238 ரன்களை விளாசியுள்ளார் தவன். சராசரி 65.15 ஆகும்.
ரோஹித்துக்கும் பாதிப்பு:
சிறந்த தொடக்க வரிசையான உள்ள நிலையில், 103 இன்னிங்ஸ்களில் இருவரும் சேர்ந்து 4681 ரன்களை சேர்த்துள்ளனர். ஒரு நாள் வரலாற்றிலேயே இது நான்காவது அதிகப்பட்ச ஸ்கோராகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com