செய்திகள்

டிராவிட் தலைமையில் இந்திய அணிக்காக விளையாடிய ஆந்திர வீரர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

31st Jul 2019 11:19 AM | எழில்

ADVERTISEMENT

 

டிராவிட் தலைமையில் இந்திய அணியில் அறிமுகமாகி, 16 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய ஆந்திர வீரர் வேணுகோபால் ராவ், ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

37 வயது வேணுகோபால் ராவ், 121 முதல் தர ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.  2017-க்குப் பிறகு எம்.ஆர்.எஃப் நிறுவனத்துக்காக கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். 

2005-ல் இந்திய அணிக்குத் தேர்வாவதற்கு முன்பு, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 501 ரன்களை விரட்டியபோது 228 ரன்கள் எடுத்துக் கவனம் ஈர்த்தார். அந்தச் சமயத்தில் முதல் தர கிரிக்கெட்டில் 5-வது அதிக சேஸிங் ஸ்கோராகும். இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பல், இவருடைய ஆட்டத்தைக் கவனித்து தேர்வுக்குழுவினரிடம் பரிந்துரை செய்ததால் இந்திய அணிக்கு ராவ் தேர்வானார். 

ADVERTISEMENT

16 ஒருநாள் ஆட்டங்களில் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார். கடைசியாக 2006-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விளையாடினார். எனினும் முதல் தர கிரிக்கெட்டில் 2017 வரை விளையாடினார். 2009-ல் ஐபிஎல் போட்டியை டெக்கான் சார்ஜர்ஸ் வென்றபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்தார் ராவ். 2014-ல் கடைசியாக டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடினார். ஓய்வுப் பிறகு தொலைக்காட்சி வர்ணனையாளராகத் தொடர்ந்து ஈடுபடவுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT