வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் அடித்தது.
அணியில் அதிகபட்சமாக குசல் பெரேரா 17 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 111 ரன்கள் விளாசினார். வங்கதேசம் தரப்பில் சைஃபுல் இஸ்லாம் 3 விக்கெட் சாய்த்தார்.
இலங்கையின் கொழும்பு நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்தது. தொடக்க ஜோடியான அவிஷ்கா ஃபெர்னான்டோ 7, கேப்டன் திமுத் கருணாரத்னே 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். குசல் மெண்டிஸ் 43, ஏஞ்ஜெலோ மேத்யூஸ் 48, லாஹிரு திரிமானி 25, திசர பெரேரா 2, தனஞ்ஜெய் டி சில்வா 18 ரன்கள் சேர்த்தனர்.
50 ஓவர்கள் முடிவில் மலிங்கா 6, நுவன் பிரதீப் ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச தரப்பில் முஸ்டாஃபிஸுர் ரஹ்மான் 2, செளம்யா சர்கார், ருபெல் ஹுசைன், மெஹதி ஹசன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.