செய்திகள்

ஒரு ரன்னில் சதத்தைத் தவறவிட்ட இளம் வீரர் ருதுராஜ்: 4-1 எனத் தொடரை வென்ற இந்திய ஏ அணி! (விடியோ)

22nd Jul 2019 01:11 PM | எழில்

ADVERTISEMENT

 

மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்கிற கணக்கில் வென்றுள்ளது இந்திய ஏ அணி.

பில்லியனரும் கிரிக்கெட் ரசிகருமான ஆலன் ஸ்டான்ஃபோர்ட் ஆண்டிகுவாவில் கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கினார். பிறகு இந்த மைதானத்தின் உரிமை ஆண்டிகுவா மற்றும் பார்புடா அரசு மற்றும் மே.இ. தீவுகள் கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் வசம் சென்றது.  அந்த மைதானத்தில் நேற்று இந்தியா ஏ - மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் ஆட்டம் நடைபெற்றது. 

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணி, 47.4 ஓவர்களில் 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடக்க வீரர் அம்ப்ரிஸ் 61 ரன்களும் ரூதர்ஃபோர்ட் 65 ரன்களும் எடுத்தார்கள். இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ள தீபக் சஹார், சைனி, ராகுல் சஹார் ஆகிய வீரர்கள் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள். 

ADVERTISEMENT

இந்த எளிதான இலக்கை இந்திய அணி 33 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்துக் கடந்தது. 22 வயது ருதுராஜ் கெயிக்வாட் ஒரு ரன்னில் சதத்தைத் தவறவிட்டார். 89 ரன்களில் 3 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் பால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத ஷுப்மன் கில் 40 பந்துகளில் 69 ரன்களும் ஸ்ரேயஸ் ஐயர் 61 ரன்களும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்கள். 

5-வது ஆட்டத்தின் சிறந்த வீரராக ருதுராஜும் இந்தத் தொடரின் சிறந்த வீரராக ஷுப்மன் கில்லும் தேர்வானார்கள். 

இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை 4-1 என இந்திய ஏ அணி வென்றுள்ளது. அடுத்ததாக, இந்தியா ஏ - மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. முதல் டெஸ்ட் நார்த் சவுண்டில் வரும் புதன் அன்று தொடங்குகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT