டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல்லில் நாளை தொடக்கம்

நான்காவது சீசன் தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் லீக் (டிஎன்பிஎல்) போட்டி திண்டுக்கல்லில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது
டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல்லில் நாளை தொடக்கம்

நான்காவது சீசன் தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் லீக் (டிஎன்பிஎல்) போட்டி திண்டுக்கல்லில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் டிஎன்பிஎல் ஊடக மேலாளர் ஆர்.என்.பாபா செய்தியாளர்களிடம் கூறியது:  4-ஆவது சீசன் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி  வெள்ளிக்கிழமை(ஜூலை 19) தொடங்கி ஆகஸ்ட் 15 வரை நடைபெறுகிறது. சென்னை, திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் டூட்டி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைக்கா கோவை கிங்ஸ், சியாச்செம் மதுரை பாந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், விபி காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடிரீம் காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. 
லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெறுகிறது.  லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். அதன்பிறகு இரு தகுதிச்சுற்றுகளும், ஒரு வெளியேற்றும் சுற்றும் நடைபெறுகின்றன. இறுதி ஆட்டம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. 
இந்த சீசனில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் 7 நாள்கள் இரு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தினந்தோறும் ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்கும். இரண்டு ஆட்டங்கள் நடைபெறும் நாள்களில் பிற்பகல் 3.15 மணிக்கு முதல் ஆட்டமும், இரவு 7.15 மணிக்கு இரண்டாவது ஆட்டமும் தொடங்கும். 
சென்னையில் இறுதி ஆட்டம் உள்ளிட்ட இரு ஆட்டங்கள் மட்டுமே நடைபெறுகின்றன. திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல்லில் தலா 15 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. திருநெல்வேலி சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமென்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை 22-ஆம் தேதி முதல் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சங்கர் நகரில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டிக்கான டிக்கெட் கட்டணம் ரூ.100. மைதானத்தில் உள்ள கவுன்டர்களிலும், ஆன்லைன் மூலமாகவும் ரசிகர்கள் டிக்கெட்டை பெறலாம். 
இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.1 கோடியும், 2-ஆவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ. 60 லட்சமும், 3 மற்றும் 4-ஆவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ. 40 லட்சமும் வழங்கப்படும் என்றார்.
அப்போது, தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் உரிமையாளர் செல்வக்குமார், காரைக்குடி காளை அணி உரிமையாளர் ரிஷிகேஷ், இந்திய ஏ' கிரிக்கெட் வீரர் அபராஜித், இந்தியா சிமென்ட்ஸ் உதவி துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, திருநெல்வேலி மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலர் ராம்குமார் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com