செய்திகள்

எங்களிடம் உலகக் கோப்பை வந்துவிட்டது: இங்கிலாந்து கிரிக்கெட் இயக்குநர் பெருமை!

16th Jul 2019 02:11 PM

ADVERTISEMENT

 

2019 உலகக் கோப்பைப் போட்டி சமீபத்தில் நிறைவுபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது.

எனினும், இங்கிலாந்து அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றதில் புதிய சர்ச்சை ஒன்று ஏற்பட்டது. இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸில், கடைசி ஓவரின் 4-வது பந்தில் பென் ஸ்டோக்ஸ் அடித்த பந்தை மார்டின் கப்தில் ஃபீல்டிங் செய்தார். அதில் இரண்டு ரன்கள் எடுக்க முயன்றார் ஸ்டோக்ஸ். அவர் இரண்டாவது ரன்னை ஓடி முடிக்கும்போது கப்தில் வீசிய த்ரோ ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பந்து, எல்லைக்கோட்டைத் தாண்டிச் சென்றது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 6 ஓவர் த்ரோ ரன்கள் வழங்கப்பட்டன (பவுண்டரி 4 + ஓடியதற்கு 2 ரன்கள்). நடுவரின் இந்த முடிவு ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அதற்கு முன்பு 3 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்கிற நிலைமை இருந்தது. அந்த 6 ஓவர் த்ரோ ரன்களுக்குப் பிறகு 2 பந்துகளில் 3 ரன்கள் தேவை என நிலைமை அடியோடு மாறியது. இங்கிலாந்து அணி ஆட்டத்தை டை செய்து, சூப்பர் ஓவரையும் டை செய்து, அதிக பவுண்டரிகளின் அடிப்படையில் இறுதிச்சுற்றை வென்று உலக சாம்பியன் ஆவதற்கு அந்த 6 ஓவர் த்ரோ ரன்கள் முக்கியப் பங்கு வகித்தன. இங்கிலாந்து அணிக்கு 5 ஓவர் த்ரோ ரன்கள் மட்டுமே வழங்கியிருக்கவேண்டும் என்று முன்னாள் நடுவர் சைமன் டாஃபல் தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: இது தவறு. முடிவெடுப்பதில் நேர்ந்த தவறு. எனினும் அந்தப் பரப்பான கட்டத்தில் ஃபீல்டர் த்ரோ வீச முயன்றபோது பேட்ஸ்மேன்கள் ஒருவருக்கொருவர் கிராஸ் செய்திருப்பார்கள் என்று நடுவர் நினைத்திருப்பார். ஆனால் டிவி ரீப்ளேக்கள் வேறொரு காட்சியைக் காண்பித்துள்ளன. மேலும் பேட்ஸ்மேன்கள் கிராஸ் செய்யாததால் அடுத்தப் பந்தை ஸ்டோக்ஸ் எதிர்கொண்டிருக்கக்கூடாது. அடில் ரஷித் தான் 5-வது பந்தை எதிர்கொண்டிருக்கவேண்டும். எனினும் இந்தத் தவறால் தான் நியூஸிலாந்து தோற்றது, இங்கிலாந்து வென்றது எனக் கூறக்கூடாது என்று கூறியுள்ளார்.

ஓவர் த்ரோ ரன் கூடுதலாக வழங்கப்பட்டாலும் உலகக் கோப்பையைத் தக்கவைத்துக்கொள்வதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட்டின் இயக்குநர் ஆஷ்லே ஜைல்ஸ்.

ADVERTISEMENT

இந்த விவகாரம் குறித்து அவர் பதில் அளித்ததாவது:

இதனால் எங்களுக்குக் கவலையில்லை. டிரெண்ட் போல்ட் வீசிய கடைசிப் பந்து லெக் ஸ்டம்ப் பக்கம் ஃபுல்டாஸாக அமைந்தது. இரண்டு ரன்கள் மட்டுமே போதாது என்றிருந்தால் அந்தப் பந்தை ஸ்டோக்ஸ், சிக்ஸருக்கு அனுப்பியிருப்பார். 

நாங்கள் உலக சாம்பியன். எங்களிடம் உலகக் கோப்பை உள்ளது. அதை நாங்கள் தக்கவைத்துக்கொள்வோம் என்று பெருமையுடன் கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT